இன்றைய நிலையில் வைத்தியசாலைகள் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. கொரிடோர்களில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இலங்கையில் கொரோனாவினால் இறந்தவர்களது தொகையில் எமது சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1500 தாண்டி உள்ளது.
இது நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
டெல்டா வேரியண்ட் எனப்படும் கோவிட் வைரஸின் புதிய திரிபு மிகவும் வீரியம் மிக்கதாகையால் எம்மை பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
1. அத்தியாவசிய தேவைகளுக்கன்றி வீடுகளை விட்டு வெளியேறலாகாது.
2. குடும்ப சந்திப்புகளை குறைத்துக் கொள்வதோடு அத்தியாவசிய சந்திப்புகளின் போது இறுக்கமான மாஸ்க் அணிதல் கட்டாயமாகும்.
3. *மரண வீடுகள், திருமண வீடுகள் இறுக்கமான மூடிய அறைகள்* கோவிட் தொற்றுதல் பரவும் அபாய இடங்களாக இனம் காணப்பட்டுள்ளன.
4. பல பிரதேசங்களில் இவ்விடங்கள் அதிக தொற்றாலாளர்களை உருவாக்கியும் உள்ளன.
முடிந்த வரை இவ்விடங்களைதவிர்ப்பது நல்லது.
5. இவ்வாறான இடங்களில் சுகாதார நடைமுறைகள் கண்டிப்பாக பேணப்படல் வேண்டும்.
6. அந்தந்த பிரதேச களநிலவரங்களைப் பொறுத்து சுகாதார பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பெற்று மஸ்ஜித் நிர்வாகங்கள் மக்களை வழிநடாத்த வேண்டும்.
அந்த வகையில் சில பிரதேசங்களில் சுயமாகவே ஜூமுஆ மற்றும் ஜமாத் தொழுகைகள் விடயத்தில் மஷூரா செய்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைகளில் இடமின்மையால் நோயறிகுறி தெரிபவர்களை இனி வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்க அரசு தீர்மானித்து வழிகாட்டல் சுற்று நிருபம் வெளியிட்டுள்ளது. அவற்றை அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
வல்லவன் அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் கட்டளைக்கு அடிபணிந்து நல்லடியார்களாக வாழ்ந்து மரணிப்பதற்கு அருள் புரிவானாக.