எதிர்காலத்தில் அரிசி விலை அதிகரிக்கலாம் எனவும், அவ்வாறு அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை குறைப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
ஊரகஸ்மங்சந்தி-ஹிபன்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரிசி விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் பலரும், அரிசி விலையை குறைப்பதற்கான யோசனையை முன்வைக்க தயக்கம் காட்டுவதற்கு என்ன காரணம் எனவும் குறிப்பிட்டார். அவ்வாறு யோசனையொன்றை முன்வைப்பார்கள் என்றால் அதனை தான் ஏற்றுகொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அதிகரித்துச் செல்லும் அரிசியின் விலையை குறைப்பதற்கு எமது அரசு எதிர்காலத்தில் முறையான திட்டமொன்றை அறிமுகப்படுத்துமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.