தூனீசியா நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கியில் பணியாற்றிய நஜ்லா போடன் ரோம்தானே துனிசியா நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக அந் நாட்டின் அதிபர் கைஸ் சயீத் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
63 வயதான ரோம்தானே நாட்டின் உயர் கல்வி அமைச்சகத்தில் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பேற்புகளை வகித்துள்ளார்.கடந்த ஜுலை மாதம் அதிபர் கைஸ் சயீத் முந்தைய அரசைக் கலைத்து உத்தரவிட்ட நிலையில் கடந்த வாரம் அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவியேற்க உள்ள நஜ்லா பத்தாவது பிரதமராவார்.நாட்டில் நிலவி வரும் ஊழலை ஒழிப்பதே புதிய அரசின் நோக்கமாக இருக்கும் எனவும் மருத்துவம், போக்குவரத்து, கல்வி, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் துனிசியா மக்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என அதிபர் சயீத் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூனீசியாவின் தற்போதைய அதிபர் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.