பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
வொஷிங்டனில் இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச் சந்திப்பில் பேசப்பட்டவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா செய்தியாளர்களிடம் விளக்கினார்.
மோடியுடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் விவகாரத்தை கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து எழுப்பியதாக வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.இந்தியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்படுவதை தடுக்க பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கமலா ஹாரிஸ் கூறியதாகவும் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், ஹக்கானி நெட்வொர்க் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் அளிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் தாமாக முன்வந்து பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.