இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டாவுக்கும் (Uhuru Muigai Kenyatta) இடையில், நேற்று (03) காலை, தொலைபேசி ஊடாகச் சுமூகக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலமாகியுள்ளமை தொடர்பில் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்ட இரு நாடுகளின் தலைவர்களும், இவ்வொற்றுமையை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளனர்.கொவிட் தொற்றொழிப்பு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டங்களின் வெற்றி தொடர்பில், கென்யா ஜனாதிபதி தமது பாராட்டுகளை, ஜனாதிபதிக்குத் தெரிவித்தார்.
நாட்டின் 70 சதவீதமான மக்களுக்குத் தடுப்பூசி ஏற்றித் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த முறைமையான வேலைத்திட்டமானது, ஏனைய நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றது எனவும், கென்யா ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, கொவிட் நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யக் கிடைத்த போதிலும், இவ்வாண்டின் இடைப்பட்ட காலப்பகுதியில், நாட்டுக்குள் புதிய கொவிட் திரிபுகள் உருவானதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துரைத்தார். வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளதென்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறே இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் முடியுமென்றுக் கூறினார்.இரு தலைவர்களும், உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.
கிழக்கு ஆபிரிக்காவின் மிக முக்கிய நாடாக விளங்கும் கென்யா, இலங்கையுடன் சிறந்த நட்புறவைப் பேணும் நாடாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகத் தொடர்புகளின் 50 வருடப் பூர்த்தி, 2020இல் முழுமையடைந்ததோடு, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகள், இரு தரப்புக்கும் இடையில் புதிய உயர் நிலையை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.