ஆமினா ரூமியின் “காயத்தின் கீறல்கள்” (Scribbles of Pain) சித்திரக் கண்காட்சி சிறுவர் தினத்தன்று இடம்பெற்றது!

Date:

பேருவளை சீனங்கோட்டை ஆரம்ப பாடசாலையின் தரம் 2 மாணவியும், சிரேஷ்ட ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸ் அவர்களின் மகளுமான செல்வி ஆமினா ரூமி அவர்களின் “காயத்தின் கீறல்கள்” (Scribbles of Pain) சித்திரக் கண்காட்சி ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தன்று பேருவளையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

 

கடந்த சில வருடங்களாக சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழு வயதேயான ஆமினா ரூமி அவர்கள் கடந்த ஒரு வருடமாக “டயலைஸிஸ்” சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இவ்வாறான பாரிய நோய் தாக்கத்திற்குற்பட்டு வலிகள் நிறைந்த சிகிச்சைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் செல்வி ஆமினா ரூமி அவர்கள் வைத்தியசாலையிலிருந்தும், வீட்டிலிருந்தும் வரைந்த ஐம்பதிற்க்கும் மேற்பட்ட சித்திரங்கள் “காயத்தின் கீறல்கள்” சித்திர கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டன. வித்தியாசமான பல்வேறு தலைப்புக்களில் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அரும்பு சஞ்சிகை ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக சிறுவர் விசேட வைத்தியர் மர்ஜான் ஹுஸைன், பேருவளை சீனங்கோட்டை ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி ஜெஸீலா, வகுப்பாசிரியை திருமதி பாஹிமா, Crown International பாலர் பாடசாலை பணிப்பாளர் ஹிஷாம் கரீம், சிரேஷ்ட மார்க்க அறிஞர் அஷ்ஷேக் பாஸில் அஷ்ரபி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளரும், எழுத்தாளருமான இப்ஹாம் அஸ்லம், Excell English College பணிப்பாளர் ஹிஷாம் மாக்கான் உட்பட குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சிறார்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமையினால் குறிப்பிட்டளவிலானோர் மட்டுமே இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி உட்பட ஏனைய அதிதிகள் செல்வி ஆமினா ரூமி அவர்களின் சித்திரங்களை பாராட்டியதோடு அவரின் சித்திரங்களில் தனித்துவம் நிறைந்துள்ளதாக குறிப்பிட்டனர். அவரது பாரதூரமான நோய் நிலைமைக்கு மத்தியில் இவ்வாறான முயற்சியை மேற்கொண்டமை வியப்பளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் நோய்வாய்ப்பட்டுள்ள சிறுமி ஆமினா ரூமி அவர்களின் இந்நிலைமையில் கூட ஆமினாவின் திறமைகளை இனங்ண்டு அவருக்கு வாய்ப்பளித்து, ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் பெற்றோரின் முயற்சி ஏனைய பெற்றோர்களுக்கு முன்மாதிரியானது என கூறப்பட்டதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

சிறுவர் தினத்தன்று கண்காட்சியில் கலந்துகொண்ட சிறார்களை மகிழ்விக்கும் நோக்கில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஆமினா ரூமி அவர்களினால் சிறிய அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதோடு நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறார்கள் ஆமினாவிற்கும் அன்பளிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தியமை பாராட்டத்தக்கது. குறிப்பாக Crown International Nursery பணிப்பாளர் ஹிஷாம் கரீம் அவர்களினால் சிறுமி ஆமினா ரூமி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஆமினா ரூமி அவர்களினால் அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறிய ஏற்பாடாக இடம்பெற்றிருந்த “காயத்தின் கீறல்கள்” (Scribbles of Pain) சித்திரக் கண்காட்சி பலரின் வேண்டுகோளுக்கிணங்க வெகுவிரைவில் விமர்சையாக ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஆமினா ரூமி அவர்களின் தந்தை, ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸ் அவர்கள் தெரிவித்தார்.

செல்வி ஆமினா ரூமி அவர்களுக்கு விரைவில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இந்நிகழ்வில் ஆமினாவிற்கு பூரண ஆரோக்கியம் வேண்டி அஷ்ஷெய்க் பாஸில் அஷ்ரபி அவர்களினால் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...