லத்தீப் பாரூக்
அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளராகவும், அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவராகவும் பணியாற்றிய ஜெனரல் கொலின் பவல் 2021 அக்டோபர் 18 திங்கள் கிழமையன்று காலமானார். அவரது மரணம் குறித்து யுத்த வெறி கொண்ட அரசியல் வாதிகளால் பெரும் கவலையும், அவரது வீரச் செயல்கள் பற்றிய புகழாரங்களும் வெளியிடப்பட்டன. ஆனால் நடுநிலை கொண்ட பத்தி எழுத்தாளர்கள் அவரை ஒரு யுத்தக் குற்றவாளியாகவே வர்ணித்துள்ளனர்.
2003ல் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான அப்பாவி ஈராக் மக்கள் கொல்லப்பட்டமை என்பனவற்றுக்காகவே அவர் ஒரு யுத்தக் குற்றவாளியாக கருதப்படுகின்றார்.
ஈராக்கை அழிப்பதன் மூலம் இஸ்ரேலை பாதுகாப்பானதாக மாற்றும் சியோனிஸ நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றியவர் தான் சொலின் பவல். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியர் ஈராக்கை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டார். அப்போது ஈராக் பெரும்பாலும் அபிவிருத்தி கண்ட எண்ணெய் வளம் மிக்க ஒரு செவ்வந்த நாடாக இருந்தது. பாரிய அழிவு தரும் ஆயதங்களை ஈராக் தன்வசம் வைத்துள்ளதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து தான் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது.
இது ஒரு வடிகட்டிய பொய், ஆனால் அந்தப் பொய்யின் மூலம் லட்சக்கணக்கான அப்பாவி ஈராக் மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கப்பட்டது. இன்னும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவற்றுக்கப்பால் கோடிக்கணக்கான டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. மொத்தத்தில் ஒட்டு மொத்தமாக ஈராக் அழிக்கப்பட்டது.
புஷ்ஷின் திட்டத்துக்கு பூரண ஆதரவளிக்க பவல் முன்வந்தார். ஜனாதிபதியின் பொய்களுக்கு அவர் மெருகூட்டினார். அவர் சொல்வது பொய் என்று பலரால் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து நிராகரித்தார். சர்வதேச ரீதியாக பெரும் சந்தேகம் கிளப்பப்பட்டிருந்த வேளையில் அவர் இந்தப் பொய்யை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தார். ஈராக் நாசகார ஆயுத அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்கின்றது என்ற ரீதியில் போலியான சான்றுகளும் அங்கு சமர்ப்பிக்கப்பட்டன.
2003 பெப்ரவரி 5ல் அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவல் ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஈராக்கிடம் நாசகார ஆயுதம் உள்ளதாக சாட்சியமளித்த போது எடுக்கப்பட்ட படம். ஆனால் பின்னர் இது பொய் என்பது நிரூபணமானது.
ஒரு வருடம் கழிந்து இது பொய்யென்பதை ஏற்றுக் கொண்டு தனது இராஜாங்கச் செயலாளர் பதவியை அவர் இராஜினாமாச் செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது காலம் கடந்து விட்டது. எல்லாமே முடிந்து விட்டது.
ஈராக மீதான யுத்தம் சட்ட விரோதமானது என்று முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனானும் அறிவித்தார். அனானின் கருத்தை பல சர்வதேச சட்ட வல்லுனர்களும் ஏற்றுக் கொண்டனர். இதனால் புஷ்ஷும் அவரது வெள்ளை மாளிகைக் கோஷ்டியினரும் தெட்டத் தெளிவாக யுத்தக் குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர்.
இந்த யுத்தத்துக்கு எதிராக பாப்பரசர் உற்பட பல சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உணர்வுபூர்வமான வேண்டுகோள்களை விடுத்தனர். அவுஸ்திரேலியா, ஜகர்த்தா, பாரிஸ், பேர்லின், லண்டன், ரோம் என உலகின் சகல கோணங்களில் இருந்தும் ஆண்களும் பெண்களும் புத்திஜீவிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் என மனித இனத்தின் சகல தரப்பினரும் இந்த யுத்தத்துக்கு எதிராக இடைவிடாது குரல் கொடுத்தனர் .அமெரிக்காவிலும் கூட ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் குளிரில் நடுங்கியவாறு வீதிகளில் இறங்கிப் போராடினர்; ஆனால் இவை எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டது.
உலகப் பகழ் பெற்ற சர்வதேச சட்ட மேதையும், சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் உப தலைவருமான காலஞ்சென்ற சி.ஜி. வீரமன்திரி”அமெரிக்க ஆங்கிலோ கூட்டணி எந்த விதமான விழுமியங்களும், சட்ட ரீதியான மற்றும் காரணிகள் அடிப்படையிலான சான்றுகள் எதுவுமின்றி தமது படைகளை ஈராக்கிய எல்லைகளுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர் அவர்கள் பக்தாத்தை நோக்கி சட்டவிரோதமான பாதையில் பாவங்களுக்கான விவிலிய சாபங்களை ஏந்தியவாறு பயணித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
நியாயங்களுக்கான எல்லா குரல்களையும் நிராகரித்த புஷ் ஈவு இரக்கமின்றி அதற்கு முன் எப்போதும் நடந்திராத வகையில் ஈராக் மீது கண்மூடித்தனமான காட்டு மிராண்டித் தாக்குதல்களை நடத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார். தாக்குதல் தொடங்கிய ஓரிரு தினங்களில் ஈராக்கிற்கான நீர் விநியோகம் மின் விநியோகம் என்பன தடை செய்யப்பட்டன. இலட்சக்கணக்கான மக்களுக்கான தண்ணீர், மின்சாரம், மருந்து ஏன் வதிவிடங்கள் என்பன கூட இல்லாமல் ஆக்கப்பட்டன. அமெரிக்க யுத்த விமானங்கள் அந்த மக்கள் மீது மரணத்தை மட்டுமே தொடர்ந்து பொழிந்து வந்தன.
ஈராக்கின் அப்பாவி பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் மிக்க பயங்கர நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். ஒவ்வெரு நாளும் இரவும் பகலுமாக ஈராக்கின் வான்பரப்பில் குண்டு மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தன. இந்த குண்டுகள் பூமியையே அதிரச் செய்தன .ஒரு காலத்தில் பூத்துக் குலுங்கிய செழிப்பான நகரங்களை இரத்தக் களரியுடன் கூடிய மனித இறைச்சிக் கூடங்களாக மாற்றின. மிகவும் அச்சத்துடன் வாழ்ந்த மக்கள் இன்னும் என்ன நடக்கப் போகின்றதோ என்ற அச்சத்தில் அன்றாடம் வானத்தைப் பார்த்தவர்களாகவே வாழ வேண்டியதாயிற்று தமது அன்புக்குரியவர்களை அந்த மக்கள் அன்றாடம் இழக்கத் தொடங்கினர் .தமது வாழ்விடங்களின் அண்மிய சூழயலில் உள்ள பல வதிவிடங்களும் ஏனைய கட்டிடங்களும் அன்றாடம் இடிந்து விழுவதையும் வீழ்த்தப்படுவதையும் கண்டு அந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மக்கள் எழுப்பும் மரண ஓலம் வாடிக்கையான ஒன்றாகியது.
எங்கும் அழிவுகள் மலிவாக இடம்பெற்றன. ஐரோப்பாவின் மனித உரிமைக் காவலர்கள் உற்பட முழு உலகும் எதுவும் செய்ய முடியாமல் இந்த அழிவுகளை கைகட்டி கவலையோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது ஒரு புறம் இருக்க ஈராக்கிய படை வீரர்களையும் அமெரிக்கப் படையினர் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தனர்.அமெரிக்காவிடம் சரணடைந்த படைவீரர்களே இவ்வாறு கொன்று குவிக்கப்பட்டனர் .எத்தனைப் படை விரர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கை இன்று வரை எவருக்கும் தெரியாது.
யூப்பிரடீஸ் மற்றும் தைக்கிரீஸ் நதிகளுக்கு நடுவே 7000 வருடங்களுக்கு மேலாக மெசப்பொத்தேமியா, சூமர், அக்காத், பாபிலோனியா ,அஸிரியா போன்ற பல பண்டைய நாகரிங்கங்கள் செழித்தோங்கிய பூமியான ஈராக்கின் பண்டைய பாரம்பரியங்கள் மற்றும் மரபுரிமைகள் என்பனவும் சேர்த்தே யுத்த வெறியர்களால் சூறையாடப்பட்டது. அங்கிருந்த தேசிய நூதனசாலை, அதிலிருந்த விலைமதிப்பற்ற கலைப்பொருள்கள் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஆவணங்கள் என்பனவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
ஈராக்கில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்டவை ,ஈராக்கின் கல்வியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள். ஏனைய புத்தி ஜீவிகள், என எல்லாத்தரப்பினரையும் அந்த சமூகத்தில் இருந்து அழித்து ஒழிக்கும் வகையிலும், இந்த இடைவெளியை இன்னும் பல தலைமுறைக்கு நீடிக்கச் செய்யும் வகையிலும் அந்தத் திட்டமிடல்கள் அமைந்திருந்தன.
இந்தத் திட்டத்தின் கீழ் நூற்றுக் கணக்கான ஈராக்கின் துறை சார் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஏனைய புத்தி ஜீவிகள் திட்டமிடப்பட்ட ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இரகசிய புலனாய்வுப் பிரிவான மொசாத்தின் கொலைகாரக் கும்பல் ஈராக்கிற்கு வரவழைக்கப்பட்டது. அவர்களிடம் 400க்கும் மேற்பட்ட கொன்றொழிக்கப்பட வேண்டிய ஈராக்கிய புத்தி ஜீவிகளின் பெயர்ப்பட்டியல் இருந்தது. வீடுவீடாகச் சென்றும், அலுவலகங்களுக்கும் ஏனைய இடங்களுக்கும் சென்று அவர்கள் அந்தப் பட்டியலில் இருந்தவர்களைத் தேடித் தேடிச் சென்று கொன்று தீர்ந்ததாக பல அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈராக்கில் அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த உயர் கல்வி பீடங்களில் சுமார் 84 வீதமான கல்வி பீடங்களை கொள்ளையடித்த பின் அவை எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஈராக்கின் தேசிய நூதனசாலையில் இருந்தும் ஏனைய அரும்பொருள் காட்சியகங்களில் இருந்தும் தொல்பொருள் பெறுமதி மிக்க இடங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும் ஏனைய கலாசார மற்றும் பாரம்பரிய நிலையங்களில் இருந்தும் விலைமதிப்பற்ற பொருள்கள் சூறையாடப்பட்டன பின் அவை அழிக்கப்பட்டன. இதனால் ஈராக்கின் வரலாறு தொல்பொருள் முக்கியத்துவம், கலாசார பாரம்பரியம், நவீன மற்றும் பண்டைய விஞ்ஞான பொக்கிஷங்கள் எல்லாமே சிதைக்கப்பட்டன. ஈராக்கிற்கு எதிரான திட்டத்தின் மிகக் கொடிய குற்றவியல் அம்சமாக அங்கு இடம்பெற்ற கொலைகளும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் கொள்ளைகளும் அழிவுகளும் அமைந்தன.
ஆக்கிரமிப்பை பூர்த்தி செய்த கையோடு எந்தப் பாவமும் அறியாத அப்பாவி சிவிலியன்களை துன்புறுத்தி சித்திரவதை செய்யும் படலமும் தொடங்கியது. ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் எந்தக் காரணமும் இன்றி எந்த நியாயம் இன்றி கைது செய்யப்பட்டு சிந்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். மனித குலத்தால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவு மோசமான சித்திரவதைகள் அங்கு அரங்கேற்றப்பட்டமை பின்னர் சர்வதேச அரங்கில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
மிகக் கொடூரமான விசாரணை முறைகளை அமெரிக்கப் படைகள் அங்கு அறிமுகம், செய்தனர்.உணவோ ,பானமோ இன்றி கூண்டுகளுக்குள் மிருகங்களைப் போல் அடைத்து வைத்தல், நிர்வாணமாக்கல், அதிக உஷ்ணம் ஏற்றல், தாங்க முடியாத குளிரூட்டல், கேற்க முடியாத அளவு ஓசை எழுப்பல், பார்க்க முடியாத அளவு வெளிச்சம் ஏற்றல், உறங்க விடாமல் தடுத்தல், அளவு கடந்த வலியை ஏற்படுத்தல், வசதியீனங்களை உருவாக்கல், மூர்க்கத்தனமாக தாக்குதல், பாலியல் ரீதியாக தரக்குறைவாக நடத்தல், பிறப்புறுக்களில் வலியை ஏற்படுத்தல், மின்சாரம் பாய்ச்சுதல், நீரில் அமிழ்த்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்தல், உணர்விழக்கச் செய்தல் என இந்தக் கொடூரங்களின் பட்டியல் நீண்டு செல்லுகின்றது. இந்த சித்திரவதை கூடங்களில் இரகசியமாக மரணித்தவர்கள் ஏராளம் வெளியே வந்தவர்கள் நடை பிணங்களாயினர்.
சித்திரவதை கூடங்களில் எடுக்கப்பட்டு பிற்காலத்தில் உலக அளவில் பேசப்பட்ட சில படங்கள்
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி சங்கிலியால் பிணைக்கப்பட்டு விசாரணை
நிர்வானமாக்கப்பட்ட ஒரு கைதி
இதேபோல் பெண்களும் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட விதத்திலும் தரக்குறைவான விதத்திலும் நடத்தப்பட்ட விதம் படங்களாக வெளியாகி உலகை அதிர்ச்சி அடைய வைத்தது. பலர் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவரும் தைரியமாக தமக்கு நடந்த கொடுமைகளை சொல்ல முன்வரவில்லை. தாங்கள் வாழும் ” பாரம்பரியமான சமூகக் கட்டமைப்புக்குள் எழக்கூடிய எதிர் விளைவுகளை எண்ணி அவர்கள் அஞ்சினர். இந்த நிலையில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே காணப்பட்டன.
அமெரிக்கா பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் எகிப்து, ஜோர்தான், மொரோக்கோ டுனீஷியா ,லிபியா, உஸ்பகிஸ்தான்,சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களை சித்திரவதை செய்யும் பொறுப்பு அந்த நாடுகளின் உள்ளூர் பொலிஸாரிடம் வழங்கப்பட்டது.அமெரிக்க விசாரணையாளர்களின் முன்னிலையிலேயே அவர்கள் வதைக்கப்பட்டனர்.
இந்த சித்திரவதை கூடங்களில் மிகவும் பிரபலமானது அபூ கிராய்ப் சிறைச்சாலை.இங்கு பெண்கள் தொடர்ச்சியாக சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் புரியப்பட்டது. சில பெண்கள் முழங்காலிட்டு நடக்குமாறு பணிக்கப்பட்டு அவர்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டது மலசலக் கூடத்துக்குள் இருக்கும் தண்ணீரை குடிக்க அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர்.
இந்தக் குற்றங்கள் அனைத்திலும் பங்காளிகளாக அரபுலக சர்வாதிகள் இருந்தமை மிகவும் வேதனைக்குரியதாகும். எகிப்தின் அன்றைய கொடுங்கோலன் ஹொஸ்னி முபாரக் ,சிரியாவின் ஹபீஸ் அல் அஸாத் ஆகியோருக்கு லஞ்சம் வழங்கப்பட்டு இந்தக் கொடூரத்தில் பங்காளிகளாக்கட்பட்டனர். தமது சுய இருப்புக்காக அமெரிக்காவின் தயவில் தங்கி இருக்கும் வளைகுடாவின் ஷேக்மார் இந்தக் கொடுமைகளுக்கான கொடுப்பனவுகளைச் செய்தனர் .ஒரு வளம் மிக்க முஸ்லிம் தேசத்தை கசாப்புக் கடை ஆக்குவதற்கு சவூதி அரேபியா மட்டும் தனது சிலுவை யுத்தப் பங்காளிகளுக்கு 70 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி உள்ளது.
இன்னமும் இதுதான் முஸ்லிம் உலகின் தலைவிதி இதே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் தான் இன்றும் மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் என உளரிக் கொண்டிருக்கின்றனர்.
(முற்றும்)