ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை சிறுவர்களுக்கான பல நலன்புரி நிகழ்ச்சிகள் நாடு பூராகவும் செயற்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ் வருட உலக சிறுவர் தினத்தின் தேசிய நிகழ்வு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களதும் தலைமையில் ஒக்டோபர் முதலாம் திகதி மு.ப 10 தொடக்கம் 12 மணி வரை தேசிய ரூபவாஹினி அலைவரிசையின் பிரதான கலையகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு இடம்பெறவுள்ளது.இதில் முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு 16 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளிக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் பகிர்ந்தளிப்பதோடு 1500 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறியினை தொடர்வதற்காக வேண்டி உதவித் தொகைகளை வழங்கப்படவுள்ளது.
“சிறுவர் எமது முன்பள்ளி” எனும் பெயரில் முன்பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி அலைவரிசையொன்று நாளை (01) ஆரம்பிக்கப்படவுள்ளது.குழந்தை மேம்பாட்டு மையங்களிலுள்ள பிள்ளைகளுக்கு மெய்நிகர் முறையில் கல்வி கற்பதற்கு அவசியமான கணினிகள் வழங்கப்படுவதோடு , இலங்கையிலுள்ள 379 குழந்தை மேம்பாட்டு மையங்களிலும் கணனி மையங்களை ஆரம்பிப்பதற்கு மாகாண நன்னடத்தை ஆணையாளர்களுக்கு 700 கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.
பின்தங்கிய பிரதேசங்களில் மாணவ , மாணவிகளின் பாடசாலை வருகையானது குறைந்து காணப்படுவதாகவும் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்குதல் மற்றும் மாணவிகளுக்கு அவசியமான சுகாதார பாதுகாப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதே இவ்வாறு பாடசாலை வருகை குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையினை மாற்றியமைக்க பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவ , மாணவிகளுக்கு அவசியமான காலை உணவை வழங்குவதற்கான செயன்முறையொன்றை தேசிய ரீதியில் ஆரம்பிப்பதும் பின்தங்கிய 350 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு “தியணி” நிகழ்ச்சியின் கீழ் சுகாதார பாதுகாப்பு வசதிகளை பெற்றுக் கொடுப்பதும் இந்த உலக சிறுவர் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலத்தில் இடம்பெறுகின்றன சிறுவர் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் சிறுவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் நாடு பூராவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.