அஜ்மல் மொஹிடீன்
தொன்னூறு ஒக்டோபர் முப்பது வடபுல முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தீர்கள்,
தொன்னூற்றைந்து ஒக்டோபர் முப்பதிலே தமிழ் மக்களின் கட்டாய இடப்பெயர்வு என்றீர்கள்,சமூகச் சிதைவை தவிர வேறு எதை கண்டீர்கள்.சோவியத் ரஷ்யா கண்ட ஒக்டோபர் புரட்சி மனித உரிமைகளை வென்றெடுத்தது
நீங்கள் எம் மீது செய்த அடாவடிகள் எமது மனித உரிமைகளை இருமணி நேரத்தில் பறித்தெடுத்தது,ஒக்டோபர் புரட்சியை அம்மணமாக்கி விட்டீர்கள்,இன்று நீங்கள் உயிரோடு இல்லை ஆனால் உம் பெயர் கூறி புலம்பிடாமல் இருக்க முடியவில்லை,
ஆறாத வலிகளோடு இன்னும் எமக்கு வழி பிறக்காமல் அழுது புலம்புகிறோம் புலிகளே,என்னினத்தின் உடைமையையும்,மண்ணின் வாழ்வுரிமையையும் நிரந்தரமாய் பறித்தெடுத்து உமதினத்தின் உரிமையை வென்றெடுக்க விடுதலை போராட்டம் என்று பெயரிட்டீர்கள்,முள்ளிவாய்க்காலில் நீங்களும் முடிந்து,தமிழீழ கனவையும் தாரைவார்த்து சென்றதை தவிர வேறு எதை விட்டு விட்டு சென்றீர்கள் யுத்த களத்தில் உங்கள் வீரம் மெய் சிலிர்க்க வைத்த தருணங்கள் நாம் கண்டோம்,ஆனால் நிராயுதபாணியாய் நின்ற எம் சமூகத்தின் உங்கள் கோழைத்தனங்கள் அல்லவா வெளிப்பட்டன.இருமணி நேரம் போதும் சென்று வாருங்கள் என்று எம்மை துரத்தியே விட்ட நீங்கள் வென்று வரவுமில்லை,எம்மை வாழ விடவுமில்லை.
இன்றோ மீளக்குடியமர எமக்கு வழித்தடை போட்டு நிற்கின்றார் பலர் உங்கள் வீரத்திற்கு தலை வணங்கினார் சிலர், விவேகத்திற்கு தலை குனிந்தார் பலர் வீரம் மிகைத்திருந்த உங்களிடம் விவேகம் எனும் இராஜதந்திரம் கையளவும் இருக்கவில்லை.இதே போன்ற ஒருநாள் அன்று ஜின்னா மைதானத்திற்கு அழைத்து அணி கூட்டி எம்மை விரட்டியே விட்டீர்,இன்று நீங்களும் அழிந்து விட்டீர்,எம்மவர் வாழ்வையும் சிதைத்து சின்னா பின்னமாக்கி சென்று விட்டீர்,
எம் பணம், நகை,சொத்துக்கள் யாவற்றையும் பறித்தெடுத்து இம்மண்ணில் உமக்குரிமை இல்லை என்றீர்,வாழ்வுரிமையும் இல்லை, வாழ்வாதாரங் களும் உங்களுக்கு இல்லை என்று யாவற்றையும் கொள்ளை அடித்தல்லவா.துப்பாக்கி வேட்டுடன் துரத்தி விட்டீர்கள்
இன்று நீங்களும் இல்லாது போய் விட்டீர்கள்,என்னதான் உரிமை வென்றீர்கள்,சோல்டன் முகாமிலே என் சகோதரர்களும்,உறவுகளும் இன்னும் அகதி அந்தஸ்தும் இல்லாமல்,கதி ஏதும் தெரியாமல் தினம்,தினம் செத்து மடிவதை யாரறிவீர் ?
தொன்னூறு வரை யாழ் மண்ணில் உமது மக்கள் பட்ட எல்லாக் கஸ்டங்களையும் நாமும் சுமந்தோம்,சுடுபட்டோம்,அன்று ஒக்டோபர் முப்பதாம் நாள் நீவிரும் எம்மை வாழ விடாது யாவற்றையும் துடைத்தெறிந்து துரத்தியே விட்டீர்,
உங்களுக்கு தெரியுமா எமது தாயகமும் வடக்கே,அங்கு வாழ்வதும்,மீள்வதும் எமதுரிமை.அம்மண்ணும்,மொழியும் எமது பிறப்புரிமை,வரலாற்றின் வழியுரிமை.மறப்பதற்கு இது ஒன்றும் ஒரு நொடி வலியல்ல,எம் சந்ததி நெடிகிலும் தொடரும் இதயவலி,நாம் கற்றறிந்தல்ல இந்த வலி, உங்களால் நாம் பட்டறிந்து பாடையிலே போகும் வரை படுகின்ற வலி
இனி ஒரு வழி சமைப்போம்,எமக்கு நாமே துணையாவோம்,நாம் நாமாக எழுந்து நிற்போம் தோழர்களே கை கோர்த்து வாருங்கள் என் தாயக மண்ணின் உறவுகளே,ஆறுதல் சொல்பவர்களும்,வாக்குறுதி தந்தவர்களும் நம்மை கண்டால் மட்டுமே,கண் துடைப்பிற்கே
யானைப் பசிக்கு சோளப்பொரி போடுகின்றார்கள் புலிகளின் துரத்திய மாறா வலிகளும், எம் வாக்கெடுத்து வாழ வழி தராது பதவி பெற்றவர் கூறும் வழிகளும் ஒன்றுதான் தோழர்களே
எமக்குள் பிளவு படாமல் வாருங்கள் என் அருமை உறவுகளே நமக்காக நாம் எழுவோம்,வாழ்ந்து காட்டுவோம்
விடுதலைப் புலிகளுக்கு ஒரு நன்றி கூற வேண்டும் நான்,கிணற்று தவளைகளாக வாழ்ந்த எம்மை கிண்ணத்து பூக்களாக மாற்றி விட்டீர்,இன்று இலங்கை முழுவதும் எம் தேசம்,உலகம் முழுவதும் எம் சஞ்சாரம்,வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம்,மறக்க மாட்டோம்
நீர்த்த சாம்பலில் இருந்து உயிர்த்த பீனிக்ஸ் பறவையாய் உயரப் பறப்போம்,
என் தாயக மண்ணின் உறவுகளே! நமக்காக நாம் உறுதி கொள்வோம் !
கை உயர்த்தி வாழ்ந்து காட்டுவோம் !
வழி சமைப்போம் !