சகல ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் கடுமையாக முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை கட்டமைப்பில் கடந்த சில தினங்களாக அதிபர்- ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நாங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுத்து வருகின்றோம்.எக் காரணத்திற்காகவும் மற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டோம்.
காலை 7.30-1.30 மணி வரையிலே எங்களுடைய கடமைகளை முன்னெடுப்போம்.இன்று முதல் எங்களுக்கு புதிய நிலைமை உருவாக வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம்.சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க உள்ளோம்.
எதிர்வரும் 9 ஆம் திகதி பகல் 2.00 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் சகல தொழிற்சங்க தலைவர்களையும் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அனைத்தும் ஒன்று திரளுவதற்கான நாள் மிக தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு நினைவூட்டிக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.