வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்டக் கட்டமைப்பை கண்டறிவது உள்ளிட்ட ஏனைய விடயங்களை திட்டமிடுவது தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இதனடிப்படையில், அரச துறையில் ஓய்வூதியம் பெறுவோரின் வயதெல்லையை 65 ஆக அதிகரித்தல் மற்றும் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரச துறையில் ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பதற்கான ஆலோசனையை நடைமுறைப்படுத்தும் உரிய தினத்தை அறிவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அடுத்த வருடத்தில் கூடுதலாக பொருளாதார துறையில் அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுகிறது.2015 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அமைந்திருந்தது. தற்போது நிலவும் டொலர் பிரச்சினை தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதன் காரணமாக நாடு 4,500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது.
வெளிநாடுகளில் கடமை புரிந்தோர்களின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதனால் நாட்டிற்கான வெளிநாட்டு வருமானம் குறைவடைந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)