தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவரின் நியமனம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் அதிருப்தி

Date:

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTI) உறுப்பினர்களின் நியமனங்களை நாம் வரவேற்கும் அதேவேளை ஆணைக்குழுத் தலைவரின் நியமனம் தொடர்பில் கீழே கையொப்பமிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கவலை அடைகிறோம்.

ஆணைக்குழுவிற்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (2)(அ)(i) இன் படி, பரிந்துரைக்கப்படுகிறவர்கள் “பொது வாழ்வில் தமக்கெனச் சிறந்த நிலையை ஏற்படுத்திக்கொண்ட நபர்களாக” இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறது. எனவே, பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நபர்களை கருத்திற்கொள்ள முடியாது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான உபாலி அபேரத்னவை ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தமையானது அவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை புறக்கணித்து சட்டத்தினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உள்ளடங்குகின்றன. மிக சமீபத்தில், அவர் அரசியல் ரீதியான தாக்கங்கள் அல்லது பாதிப்புக்கள் பற்றிய விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

அவரது வழிகாட்டலின் பேரில், குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது தற்பொழுது விசாரணையில் உள்ள வழக்குகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றத்தை கோரும் அளவுக்கு சென்றது மேலும் அன்றைய சட்டமா அதிபர் திரு. டப்புல டி லிவேராவினால் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கப்பட்ட வழக்குகள் நீதித்துறையின் முன் விசாரணைக்கு வருவதை நிறுத்துமாறும் பரிந்துரைத்தது. அதேபோல் அவ்வாறான வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறும் பரிந்துரைத்தது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் குறித்த நடவடிக்கைகளானது நாட்டில் அதிகார வேறாக்கத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் பல விமர்சனங்களை உருவாக்கியது. பல தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு எட்டப்பட முன்னர் இத்தகைய நபரின் நியமனமானது “பொது வாழ்வில் தமக்கெனச் சிறந்த நிலையை ஏற்படுத்திக்கொண்ட நபர்” என்ற சட்ட நிபந்தனைக்கு இணங்குகிறதா என்பது தொடர்பில் கடுமையான சந்தேகம் நிலவுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (2)(அ)(iii) ஆனது நியமிக்கப்படக்கூடியவருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் குறித்து மேலும் குறிப்பிடுகையில் குறித்த நபர் “ஏதேனும் பொது அல்லது நீதித்துறைச்சார் பதவியை அல்லது வேறு ஏதேனும் இலாபமீட்டும் பதவியை வகிக்காத நபராக” இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறது. நீதியரசர் அபேரத்ன தற்போது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) தலைவராகவும் OMP சட்டத்தின் பிரிவு 20 இன் படி சம்பளமும் பெறுகிறார். ஆகவே, நீதியரசர் அபேரத்னவின் நியமனமானது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக்கு முரணானதாகும்.

RTI ஆணைக்குழுவின் இரண்டாவது உறுப்பினர் கட்டமைப்புக்குள் நாட்டின் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க தவறவிட்டதால் சமத்துவம் மற்றும் உள்வாங்கல் வாய்ப்பு போன்ற அடிப்படை விடயங்களை நிலைநிறுத்துவதில் தோல்வியுற்றுள்ளோம் என்பதை நாம் கவலையுடன் குறிப்பிடுகின்றோம். எனவே, இலங்கை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் காணப்படும் பாரபட்சம் மற்றும் சமநிலையின்மை போன்ற இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டமானது இயற்றப்பட்டதிலிருந்து நாட்டு மக்களினால் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற ஓர் உரிமைச் சட்டமாகும். இது அவர்களின் அன்றாட வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஓர் சுயாதீன RTI ஆணைக்குழுவானது RTI தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்தல் மற்றும் சட்ட மேற்பார்வை அமைப்பாக தொழிற்படல் போன்ற முக்கிய வகிபாகங்களை ஆற்றி வருகிறது.

எனவே, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பன்முகத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட ரீதியான கட்டமைப்புக்கு ஏற்ப RTI ஆணைக்குழுவின் நியமனங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

 

நதிஷானி பெரேரா – நிறைவேற்றுப் பணிப்பாளர், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

ரோஹன ஹெட்டியாராச்சி – நிறைவேற்றுப் பணிப்பாளர், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு

Dr. பாக்கியசோதி சரவணமுத்து – நிறைவேற்றுப் பணிப்பாளர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA)

சகுந்தலா கதிர்காமர் – நிறைவேற்றுப் பணிப்பாளர், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை (LST)

லியோனல் குருகே – சிரேஷ்ட ஆய்வாளர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA)

மஞ்சுலா கஜநாயக்க – தேசிய ஒருங்கிணைப்பாளர், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV)

பிலிப் திஸ்ஸநாயக்க – நிறைவேற்றுப் பணிப்பாளர், Right to Life, மனித உரிமைகள் மையம்

மைத்ரேயி ராஜசிங்கம் – நிறைவேற்றுப் பணிப்பாளர், விழுது

திலக் காரியவசம் – தலைவர், Food First Information & Action Network of Sri Lanka (FIAN)

நிஷாந்த ப்ரீதிராஜ் – தேசிய அமைப்பாளர், தேசிய தேசோதய சபை

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...