இந்திய ஒருநாள் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய ஒரு நாள் அணிக்கு ரோஹித் சர்மா தலைவராக பொறுப்பேற்பார் என பிசிசிஐ இன்று (08) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் அஜிங்கியா ரஹானேவுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் விராட் கோஹ்லி தலைமையில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி ஒரு நாள் உலகக் கிண்ணங்களை இந்திய அணி கைப்பற்றத் தவறியுள்ளது.இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோஹ்லி, கடந்த மாதம் நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு T20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்திய T20 அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையிலும், வலுவான இந்திய அணியை உருவாக்கும் முடிவிலும் தற்போது ஒரு நாள் தலைவர் பதவியிலிருந்தும் விராட் கோஹ்லி நீக்கப்பட்டுள்ளார், இதனால் அவருக்குப் பதில் உப தலைவராக இருந்த ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் புதிய தவைராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.