பாகிஸ்தான் அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருபதுக்கு இருபது தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இருபதுக்கு இருபது தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியதோடு,முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை நிலைநாட்டியிருந்தது.இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 4 ஆம் திகதி டாக்காவில் ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.மழை காரணமாக முதல் மூன்று நாட்கள் பல மணி நேரம் போட்டி இடை நிறுத்தப்பட்டது.இந் நிலையில் நான்காவது நாளில் பாகிஸ்தான் அணி 300 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.
முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி வீரர்கள் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின் போது பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இன்று (08) 5வது நாள் ஆட்டத்தை தொடங்கிய போது 11 ஓட்டங்களை மேலதிகமாக பெற்று 87 ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி பங்களாதேஷை பலோவ் ஆன் செய்ய அழைத்த போது இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.இதனால் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பாபர் அசாம் 76 ஓட்டங்களையும், அசார் அலி 56 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 53 ஓட்டங்களையும் ,பவாத் அலாம் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷகிப் அல் ஹசன் 63 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 48 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தாஜுல் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அஹ்மத், ஹுசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சஜித் கான் 8 விக்கெட்களையும் ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் அணித் தலைவர் பாபர் அசாம் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்கள்.
போட்டியின் நாயகனாக சாஜித் கான் மற்றும் தொடர் நாயகனாக ஆபித் அலி தெரிவானார்கள்.தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .