பயங்கரவாதத்திற்கு எதிரானது இஸ்லாம்!

Date:

(பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமான முறையில் இலங்கை நபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷைக் S.H.M.பளீல் எழுதியுள்ள விசேட கட்டுரை.)

இஸ்லாத்தின் பெயரால் இயங்குகின்ற தீவிரவாதிகள் உலகத்தில் மிகப் பயங்கரமான படுகொலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்த தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற கொடூரமான மிலேச்சத்தனமான அந்த படுகொலை அமைகிறது.அது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

ஐ. எஸ். எஸ்.,அல்ஷபாப்,புகோ ஹராம் அல்-காய்தா, போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பல முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் இதுவரை இஸ்லாத்தின் பெயரால் கொலை செய்திருக்கிறார்கள்.அதுவும் கொலைகள் இடம்பெற்ற விதம் மிகக் கொடூரமானது. தாம் எதிரிகள் என்று கருதுபவர்களை கைது செய்து சிலபோது கைகளை பின்னால் கட்டி படுக்கவைத்து பலர் பார்த்திருக்க அவர்களை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்கள். தற்போதும் இந்த ஈனச் செயல் நடைபெற்று வருகிறது

இத்தகைய வன்செயல்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இஸ்லாத்தில் எவ்வித அங்கீகாரமும் கிடையாது. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் இத்தகைய பயங்கரவாத இயக்கங்களது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு இஸ்லாத்தின் பார்வையில் இவை பெரும்பாவங்கள் என்றும் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
அல்குர்ஆனில் அல்லாஹ் ‘யார் ஓர் ஆத்மாவை கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் (மனித சமுதாயத்தையும்) கொலை செய்தவர் போலாவார்.யார் ஓர் ஆத்மாவை வாழவைக்கிறாரோ அவர் முழு மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்று தெளிவாகக் கூறுகிறான்.அனைத்து உயிர்களையும் அது எந்த உயிராயினும் பாதுகாப்பது என்பது இஸ்லாத்தின் இலக்குகளில்(மகாஸித்) ஒன்றாகும். அது ஹிப்ளுன் நப்ஸ் எனப்படும்.

தாகமாக இருந்த நாய்க்கு தண்ணீர் புகட்டிய மனிதன் சுவர்க்கம் சென்றதாகவும் பூனையைத் துன்புறுத்திய பெண் நரகம் சென்றதாகவும் நபிகளார் (ஸல்) கூறியதில் இருந்து இஸ்லாத்தின் பரந்த அன்புப் பார்வை மனிதர்களது வட்டத்தில் இருந்து மிருக உலகையும் தழுவியிருப்பதைக் காட்டுகிறது.

எல்லாச் சமூகங்களிலும் உள்ளார்கள் ஆனால் உலகில் முஸ்லிம்கள் மாத்திரம் தான் இத்தகைய அமானுஷ்யமான கொடூரமான தாக்குதல்களை செய்திருக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை.1809 ஆம் ஆண்டு சிலுவை வீரர்கள் பைத்துல் முகத்தஸ் பகுதியில் சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை மிக மோசமாக கொலை செய்திருக்கிறார்கள். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுடைய உடல்களில் இருந்து வெளியாகிய இரத்த வெள்ளத்தில் சிலுவை வீரர்களின் குதிரைகளது கால்கள் கூட மறைந்ததாக வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

1945 களில் ஹிட்லர் யூதர்களை கொன்ற விதம் வரலாற்றில் இன்றும் போல ஹொலொகோஸ்ட் எனப்படுகிறது. சுமார் 60 லட்சம் யூதர்கள் நெருப்பில் இடப்பட்டும் நச்சுவாயுக்கள் அடிக்கப்பட்டும் பசியோடும் பட்டினியோடும் போடப்பட்டும் நோய்வாய்ப்பட்டும் கொன்றொழிக்கப்பட்டனர். நாஜி கட்சியை ஸ்தாபித்த ஹிட்லர் தனது எதிரிகளை இவ்வாறு கொலை செய்தமை வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பயங்கரமான கொலையாகும்.

போஸ்னியா ஹெர்ஸிகோவினா இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் எமக்கு அந்நியமானவை அல்ல. இன்றும் கூட அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களது சமூகப் புதைகுழிகளில் இருந்து எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டு வருவதை அறிகிறோம்.

ஈராக்கில் மனித பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாக கூறிக்கொண்டு நுழைந்த அமெரிக்க படை சுமார் ஒரு மில்லியன் ஈராக்கியர்களை படுமோசமாகக் கொலை செய்தது. அவர்களில் பலர் வதை முகாம்களில் போடப்பட்டு மிக மோசமாக வதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் தான்.

இலங்கையில் நடந்தவை நம் தேசமான இலங்கையும் இத்தகைய மனிதப் படுகொலைகளுக்கு விதிவிலக்கானது அல்ல.1956,58,71,83 ஆகிய காலப் பிரிவுகளில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயங்களாகும். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் தமிழர்கள் வாகனங்களுக்குள் இருக்கும் நிலையில் தீயிடப்பட்டு கிணறுகளுக்கு தள்ளப்பட்டு சுடச்சுட தார் பீப்பாக்களுள் இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.1980 களின் பணப்பெறுமதியின் படி தமிழர்களுக்கு 300 மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள் சொத்து நஷ்டங்கள் ஏற்பட்டன. அன்னளவாக 3000 பேர் இவ்வாறு மோசமாக கொலை செய்யப்பட்டார்கள்.

1987-89 ஜேவிபி கிளர்ச்சியின் பொழுது சுமார் 30,000 ற்கும் அதிகமான அரச ஆதரவாளர்கள் அவர்களால் படுமோசமாக கொலை செய்யப்பட்டதாகவும் 5,000 மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இத்தகையவர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிகள் தோண்டி எடுக்கப்பட்டன.1997- 89 க்கு இடைப்பட்ட காலப் பிரிவில் பாதை ஓரங்களில் சடலங்கள் குவிக்கப்பட்டு அவை பெட்ரோல் ஊற்றப்பட்டு டயர்கள் போடப்பட்டு நெருப்பிலிடப்பட்டு அந்த சடலங்களது ஊனங்கள் பாதைகளில் கசிந்த காட்சிகள் இன்றும் எனது மனக்கண்முன் நிழலாடுகின்றன.சூரியகந்த, பட்டலந்த சித்திரவதை முகாம்கள் குறிப்பிடத்தக்கவை.

முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களது தொகை சுமார் ஒரு லட்சத்தை தாண்டுகிறது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாசிகசாலை தீக்கிரையாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான நூல்கள் எரிந்து போயின. மனிதப் படுகொலைக்கு நிகரான ஒரு படுகொலை தான் புத்தகப் படுகொலையுமாகும்.

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது எல்லா இனத்தவர்களுக்கும் மத்தியிலும் இத்தகைய மனித சமுதாயத்திற்கு எதிரான ஈவிரக்கமற்ற படுபாதகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதனை காட்டுகிறது.

இவை அனைத்தும் கண்டிக்கத்தக்க படுமோசமான செயல்பாடுகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வாறு கொலை செய்யப்படுகின்றவர்களைப் பெற்றெடுத்த தாய்மார் தகப்பன்மார் அவர்களது உறவினர்கள் எவ்வாறு கண்ணீர் வடித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்யவும் முடியாது. பத்துமாதம் சுமந்து பெற்ற ஒரு பிள்ளை இவ்வாறு கண்முன்னே டயரில் எரிவதையும் கிணற்றில் தள்ளப்படுவதையும் நெருப்பில் எறியப்படுவதையும் பார்க்கின்ற எந்தத் தாயினதும் மனது வெடிக்கத்தான் செய்யும். எனவே இத்தகைய படுகொலைகள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது முஸ்லிம் பெயர்தாங்கிகள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 253 அப்பாவி பொதுமக்கள் பதைக்கப்பதைக்க கொலை செய்யப்பட்டார்கள்.500 பேர் அளவில் காயமடைந்தார்கள். இவற்றைச் செய்த இஸ்லாத்தின் பெயரிலான தீவிரவாதிகளை எப்படி மனித சமூகம் மன்னிக்கும்?

1992ல் காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் பள்ளிவாயல்களில் தொழுது கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுமோசமாக கொலை செய்த புலிகளை மனித சமுதாயம் எப்படி பார்க்கும்? நியூசிலாந்தில் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வந்திருந்த அப்பாவி பொதுமக்களை இயந்திரத் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்த கயவனை மனித சமுதாயம் எப்படி பார்க்கும்? தலதா மாளிகை ருவன்வெலிசாய போன்றவற்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய புலிகளை மனித சமுதாயம் எப்படிப் பார்க்கும்? எல்லாமே பயங்கரவாதம் தான்.

எனவே எல்லா சமுதாயங்களிலும் இத்தகையவர்கள் இருக்கிறார்கள்;இருந்து வருகிறார்கள். இப்படியானவர்கள் உருவாக்குகின்ற பின்னணிகளை நாம் கவனித்து அவர்களை நேர்வழியில் செலுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். சாந்தியும் சமாதானமும் நிலவுகின்ற பகைமை, பொறாமை ,துவேஷம், இனவாதம் போன்றன அற்ற உலகத்தை நாம் கட்டியெழுப்ப கங்கணம் கட்ட வேண்டும்.

பயங்கரவாதம் தீவிரவாதம் என்பன உருவாகியிருப்பதற்கான காரணங்களை நாம் காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையாக நின்று ஆராய வேண்டும்.அவற்றிற் சில வருமாறு:-

1. மதத்தை பிழையாக விழங்கியமை
2. அரசியல் ரீதியான அராஜகங்களுக்கு உள்ளாகியமை
3. இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருத்தல்
4. பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுதல்
5. உலக அரசியல் மாபியாக்கள் தமது கீழ்தரமான நோக்கங்களை அடைய தீவிரவாதிகளை கைப்பாவையாக பாவிக்கின்றமை
6. ஆயுத விற்பனையாளர்களது தமது ஆயுதச் சந்தையைத் தக்கவைத்துக்கொள்ள பயங்கரவாதிகளை உருவாக்கி போஷிக்கின்றமை போன்ற இன்னும் பல காரணங்களால் பயங்கரவாதம் உருவாகிறது.

எது எப்படியாயினும் பயங்கரவாதிகளை சுதந்திரமாக நடமாட விடாமல் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இறுதியாக பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட அந்த சிங்கள சகோதரரது குடும்பங்களுக்கு எமது ஆழமான அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கையில் இந்த சம்பவம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடாது.

நாம் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள். ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு ஒரு குறிப்பிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக அந்த முழு சமூகத்தையோ அந்த சமூகம் சார்ந்நதிருக்கின்ற மதத்தையோ குறை சொல்வது என்பது எவ்வகையிலும் பொருத்தமானதல்ல. புலிகள் இழைத்த குற்றத்துக்கு தமிழர்கள் பொறுப்பாக முடியாது. ஜேவிபியின் அழிச்சாட்டியங்களுக்கு சிங்கள சமூகம் பொறுப்பாக முடியாது. நியூசிலாந்து பள்ளிவாயலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் செயலுக்காக கிறிஸ்தவ சமூகம் பொறுப்பாக முடியாது. ஹிட்லரின் செயலுக்கு அவர் சார்ந்திருந்த சமூகம் பொறுப்பல்ல.

எனவே நாம் இத்தகைய பரந்த கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் நோக்கி சுபீட்சமான உலகம் ஒன்றை கட்டியெழுப்ப பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்வோமாக

Popular

More like this
Related

இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு...

‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த ‘Expo 2024’ கண்காட்சியும் கருத்தரங்கும்

பாகிஸ்தான் அரசின் உயர்கல்வி ஆணைக்குழுவினால் வருடாந்தம் வழங்கப்படும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்...

ஒன்லைன் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு: இராணுவத் தளபதிக்கெதிராக அவதூறு பரப்பிய யூடியூபுக்கு தடைவிதிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...