2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்

Date:

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது.

சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.

மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.

இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று (17) நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்த முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.

அந்தவகையில் பலாங்கொடை – பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, ஹட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட – இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.

மேலும், கொரோனா காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும்.

புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (18) ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ஆம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...