சிரியா நாட்டில் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அங்கு அரச படைகளும் , கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள்.இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் சிரியா மீது இஸ்ரேல் அடிக்கடி தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந் நிலையில் சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது.அந் நாட்டின் கடற்கரை நகரமான லதா கியாவிலுள்ள துறைமுகம் மீது இன்று (07) அதிகாலை இஸ்ரேல் போர் விமானங்கள், ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் பகுதியில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அப் பகுதி முழுவதும் தீப்பிடித்து அழிந்துள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.மேலும் துறைமுகத்தில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், கொள்கலன்கள் பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்ததாகவும், அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றதாகவும், சிரியா அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ராணுவ தரப்பில் கூறும்போது, “லதாகியா துறைமுகத்தில் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அங்கு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தது.
சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் லதாகியா துறைமுகத்தில் இடம்பெற்று வருகிறது. அந் நாட்டின் மிக முக்கிய துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.