2004 டிசம்பர் 6ம் திகதி மாபெரும் அழிவையும் மனித அவலத்தையும் ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கம் இடம்பெற்று 17 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. பெரும்பாலும் இலங்கையின் கிழக்குப் பகுதியைப் பதம் பார்த்த சுனாமி; அங்குள்ள முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட ஒரு சத வீதத்தை பலியெடுத்தது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் வகையில் சவூதி அரேபியா அம்பாறை மாவட்டத்தில் 500 வீடுகளை நிர்மாணித்தது. அந்த வீடுகள் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறத் தயாராக இருந்த நிலையில் பௌத்த மதகுருமார் தலைமையிலான இனவாத குழுக்கள் மேற்கொண்ட எதிர்ப்புகள் காரணமாக இன்றுவரை கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இன்று அவை புதர்க் காடுகளாகவும், பாம்புகளின் பொந்துகளாகவும் ஏனைய விஷ ஜீவராசிகளின் வாழ்விடங்களாகவும் மாறி உள்ளன.
இதே போல் கோடிக்கணக்கான வெளிநாட்டுப் பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வந்து குவிந்தன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தமக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர். இந்த பணத்தில் பெரும் பகுதி எங்கே போனது என்பதே தெரியவில்லை.
முஸ்லிம்கள் வாழும் மருதமுனை நகருக்கு ஏற்பட்ட அழிவு
மனிதப் பேரவலத்திலும் கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டமையும் அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டமையும் பெரும் வேதனைக்குரியதாகும்.
கடும் சீற்றத்துடன் கரையைத் தொட்ட சுனாமிப் பேரலைகள் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டன. பல குடும்பங்களை சீர்குலைத்தது. சமூகக் கட்டமைப்புக்களைத் துடைத்தெறிந்தது. பல கட்டிடங்களைத் தரை மட்டமாக்கியது. பல கிராமங்களையும் நகரங்களையும் அழித்தது. இந்த நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத அழிவினை அது ஏற்படுத்தியது.
முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். கிழக்கில் அவர்கள் வாழ்ந்த பல கிராமங்கள் அடியோடு அழிந்து போயின. சுனாமிக்குப் பிந்திய ஆரம்ப சில நாற்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அனுதாபங்கள் கரைபுரண்டு ஓடின. உதவிகளும் வந்து குவிந்தன. சகல பிரிவுகளையும் சேர்ந்த சகல தரப்பையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஓடோடிச் சென்றனர்.
கொழும்பில் வாழ்நத மக்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டம் கூட்டமாகவும் கையில் கிடைத்த உணவுகள், தண்ணீர் மற்றும் துணிமணிகள் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்றனர். ஜாதி, இனம், மதம், மொழி என எல்லாவற்றையும் மறந்து பாதிக்கப்பட்டவர்களை நோக்கி மக்கள் நேசக் கரம் நீட்டியமை பாராட்டுக்குரியதாக அமைந்தது.
சிலர் கொடுத்து கொடுத்தே தமது சொந்தப் பை காலியாகும் அளவுக்கு உதவினர். சிவில் சமூக அமைப்புக்களும் தங்களால் ஆன உதவிகளை வாரி வழங்கின. பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தேய்ந்து போன நம்பிக்கையை அவர்கள் மீளக் கட்டி எழுப்பினர். கருணையும் இரக்கமும் மக்கள் மத்தியில் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை அவர்கள் ஒட்டு மொத்தமாக வெளிப்படுத்தினர். ஆனால் அரசியல்வாதிகளோ இதற்கு முற்றிலும் மாறாக இந்த அழிவையும் அரசியலாக்கி மக்களை கூறு போட்டனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பிளவு பட்டிருந்த சமூகங்களை சுனாமி ஒன்றிணைத்த போதிலும் அது ஒரு குறுகிய கால கனவாகவே அமந்தது. சுனாமி ஏற்பட்டு ஒரு வருடத்துக்கு முன்பே மீண்டும் மோதல்கள் தலைதூக்கின. ஆரம்ப மதிப்பீடுகள் சிலவற்றின் படி ஒட்டு மொத்த சேதம் 1தசம் 5 பில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடப்பட்டது. அதேபோல் பில்லியன் கணக்கான டொலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளாகவும் நிவாரணங்களாகவும் நாட்டுக்குள் வந்ததாகவும் அறிக்கைகள் உள்ளன.
உதவிக்காகக் காத்திருந்த மக்கள் தமக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்றும் வந்த பணம் எல்லாம் மாயமாக மறைந்து போய்விட்டன என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அவர்கள் தற்காலிக பலகைக் கொட்டில்களில் வசித்து வந்தனர். நாட்டுக்குள் வந்த பணம் அரச நிறுவனங்களில் மட்டும் வைப்பில் இடப்படவில்லை. மாறாக அவை தனிநபர் கணக்குகளிலும், கம்பனிகள் மற்றும் தர்ம ஸ்தாபனங்களின் கணக்குகளிலும் வைப்பில் இடப்பட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகின.
ஊழல் எதிர்ப்பு சம்பந்தமாகப் பணியாற்றும் ஒரு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ருக்ஷானா நாணயக்கார குறிப்பிடுகையில் “பணத்துக்கு என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டமானது. ஆரம்ப கட்ட அரச கணக்காய்வு ஒன்றின் படி புனர்நிர்மாணப் பணிகளின் முதலாவது ஆண்டில் மொத்த உதவியில் 13 வீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பிறகு இது சம்பந்தமான எந்த ஒரு கணக்கும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுனாமியில் இருந்து உயிர் தப்பிய நூற்றுக் கணக்கான மக்கள் உள்ளுர் மற்றும் சர்வதேச நிவாரண முகவராண்மைகளுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு அமைப்புக்களிடம் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளனர். உதவியாகக் கிடைக்கப்பெற்ற பணம் தொடர்பாக முறையான கணக்குகள் எதுவும் பேணப்படவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் நன்மைக்காக ஒரு பகுதி பணம் மட்டுமே செலவிடப்படடுள்ளதாக நாம் நம்புகின்றோம் என நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மிக மோசமான நிலைமையில் வாடுகின்ற போது, அவர்கள் தற்காலிக கொட்டில்களில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த போது தான் அவர்களுக்கு கிடைத்த நிவாரண உதவிகளிலும் ஊழல் இடம்பெற்றுள்ளது என்ற அறிக்கைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கின. ஒரு மனிதப் பேரவலத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கு கிடைத்த உதவிகளைக் கூட சூறையாடி உள்ளார்கள் என்றால் அவர்கள் எந்தளவு மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்க வேண்டும்.
அன்றைய கணக்காய்வாளர் நாயகம் எஸ்;.ஸி மாயதுன்னே வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி “அரச அதிகாரிகள் ஆயிரக்கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அதிகாரிகள் மில்லியன் கணக்கான ரூபாய்களை நிவாரணமாகப் பகிர்ந்தளித்தனர். ஆனால் அவர்களுள் அநேகமானவர்கள் சுனாமியால் எந்தப் பாதிப்பையும் சந்திக்காதவர்கள். அதேவேளை உண்மையான பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்த பல குடும்பங்களுக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உலர் உணவு பொருள் நிவாரணங்கள் கூட கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வெளிநாட்டு உதவி உத்தரவாதமாக 3 தசம் 2 பில்லியன் டொலர்கள் கிடைத்ததாக இன்னும் சில தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கணக்குகள் சரியாகப் பேணப்படாத நிலையில் கிடைத்த பணத்துக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிக்கக் கூட முடியாத நிலை இருந்தது. உத்தியோகப்புர்வமாக வெளியிடப்பட்ட தரவுகள் கூட அவ்வப்போது முரண்பட்டன. சுமார் ஒரு லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டதாக அல்லது முற்றாக அழிந்து போனதாக தகவல்கள் உள்ளன. ஆனால் சுனாமியின் இரண்டாம் ஆண்டு நிறைவின் போது இவற்றில் அரைவாசி மட்டுமே ஒன்றில் திருத்தி அமைக்கப்பட்டன அல்லது கட்டி முடிக்கப்பட்டன.
2006ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி தி ஐலண்ட் ஆங்கிலப் பத்திரிகையில் ஷமிந்திர பெர்ணான்டோ என்பவர் எழுதிய ஒரு கட்டுரைக்கு சுனாமி மோசடியாளர்களுக்கு மகிழ்ச்சியான காலம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் “சுனாமி இடம்பெற்று வருடங்கள் கழிந்தும் கூட நிவாரணங்களை வீணாக்கியமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அரச அதிகாரிகளைத் தண்டிக்க அரசாங்கம் தவறி விட்டது. முன்னொருபோதும் இல்லாத இயற்கை அழிவுக்குப் பின்னரும் கூட ஊழலும் அலட்சியமுமே தலைவிரித்தாடுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். பாரிய அளவிலான வீண் செலவுகள் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்கள் இருந்தும் கூட அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல்வாதிகள் அதிகாரிகளோடு இணைந்து சதி செய்து தமது ஆதரவாளர்களைக் காப்பாற்றி குற்றங்களை மூடி மறைத்தனர். இதனை தமது சுய நலன்களுக்காகவே அவர்கள் செய்தனர். வஞ்சகமான முறையில் இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் மூலம் அரசியல்வாதிகள் நன்மைகளை அடைந்து கொண்டனர். இது உதவிகள் வழங்கல், நிவாரணங்கள் வழங்கல் அதற்கான வாகனங்களை ஒப்பந்தம் செய்தல் என எல்லா வழிகளிலும் தொடர்ந்தது.
இதேபோல் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மற்றொரு பத்தி எழுத்தாளர் உள்ளுர் பத்திரிகை ஒன்றில் எழுதிய ஒரு கட்டுரையில் “நாங்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்ந்தோம் என்பது உண்மை தான் ஆனால் நாம் துரரிஷ்டவசாக உயரமாக எழுந்தததை விட வேகமாக வீழ்ந்தோம் என்பதே உண்மையாகும். எனவே தான் டிசம்பர் 26ல் காலை 9.30க்கு மௌன அஞ்சலி செலுத்துகின்ற போது சக மனிதர்கள் என்ற நிலையிலும் சக பிரஜைகள் என்ற நிலையிலும் நாம் முறையாக நடந்து கொள்ளத் தவறி விட்டோம் என்பதையும் நினைவு கூற வேண்டும். அந்த நேரத்தில் நாம் எந்த வகையில் எதைச் செய்தாலும் ஒரு பௌத்த நாடு என்ற வகையில் கர்மாவின் பலன் என்றும் ஒன்று உள்ளது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. மனித குலத்துக்கு ஏற்பட்ட அவலத்தை தனக்கு இரையாக்குவது மோசமான தண்டனைகளைத் தரக் கூடியது என்பதை மறந்து விடக் கூடாது. எமது தவறுகளை நாம் திருத்திக் கொள்வோம். அவ்வாறு தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு அதில் இருந்து விடுபட்ட ஒரு தேசத்தின் மக்களாக நாம் எழுந்து நிற்போம். சுனாமி பேரலையில் இருந்து தப்பிய ஒவ்வொருவரும் இவ்வாறு ஒன்றிணைந்து உறுதியோடு முன்னேரிச் செல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி பேரலைகள் ஏற்பட்டபோது அன்றைய ஜனாதிபதியாக இருந்த திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அப்போது லண்டனில் இருந்தார். அவர் அவசரமாக நாடு திரும்பி வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறு மாதங்களுக்குள் வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார். சுனாமி வந்த வேகத்தில் எப்படி மறைந்து போனதோ அதேபோல் தான் இந்த வாக்குறுதியும் காணாமல் போய்விட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியாக பில்லியன் கணக்கான தொகை பணம் கிடைத்தும் இந்த நிலை ஏற்பட்டது தான் பெரும் கவலைக்குரியது.
சுனாமிக்குப் பிறகு சந்திரிக்காவின் அரசு எல்டிடியுடன் இணைந்து கூட்டுப் பொறிமுறை ஒன்றை அமுல் செய்வதற்கான திட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இந்த விடயத்தில் இருளில் வைக்கப்பட்டதோடு மட்டுமன்றி, முஸ்லிம்கள் இந்த உடன்படிக்கையில் பங்கேற்பதை எதிர்த்த எல்டிடியை சந்தோஷப்படுத்தும் நோக்கில் முஸ்லிம்கள் இந்த விடயத்தில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். பின்னர் இந்த உடன்படிக்கை சுனாமிக்குப் பிந்திய செயற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பு (Post Tsunami Operational Management Structure (P-TOMS), என அழைக்கப்பட்டது. 2002 பெப்பரவரியில் எல்டிடியுடன் யுத்தநிறுத்த உடன்படிக்கை செய்த போது ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தாரோ அதையேதான் சந்திரிக்காவும் செய்தார். இந்த யுத்தநிறுத்த உடன்படிக்கையின் போது வழங்கப்பட்ட எல்லா வாக்குறுதிகளையும் மீறி முஸ்லிம் நலன்கள் முற்றாக ஒதுக்கித் தள்ளப்பட்டன. அதுவோதான் P-Toms இலும் நடந்தது.
என்ன விலை கொடுத்தாயினும் எல்டிடியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்ற சந்திரிக்காவின் ஆர்வம் முஸ்லிம்களை முற்றாகப் புறக்கணிக்கச் செய்தது. முன்னைய சமாதான உடன்படிக்கையாயினும் சரி அல்லது சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்திலும் சரி இரண்டிலும் முஸ்லிம்கள் நலன் புறக்கணிக்கப்படுவதற்கான சதியில் பிரதான பாத்திரத்தை நோர்வே ஏற்றிருந்தது.
சசன்க சமரக்கொடி என்ற பத்தி எழுத்தாளர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “எமது சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களின் பிரதான முன்னுரிமையாக இருந்தது நிச்சயமாக மக்களின் நலனோ அல்லது இந்த தேசத்தின் ஆள்புல ஒருமைப்பாடோ அல்ல. மாறாக என்ன விலைகொடுத்தேனும் மீண்டும் மீண்டும் பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவதே அவர்களின் பிரதான குறிக்கோளாக இருந்தது. மேலும் அண்மைய வரலாறுகளில் காணப்படுவது போல் அதிகாரத்தை அனுபவிப்பதற்காகவும் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பேய்களுடன் கூட உடன்பாடுகளை செய்து கொள்ள அவர்கள் தயங்கப் போவதில்லை. எமது தெற்கு அரசியல் தலைவர்களின் இந்த பலவீனத்தை எல்டிடிஈ நன்றாகப் புரிந்து வைத்திருந்தது. அதனால் P-Toms நாடகத்தின் பின்னணியையும் அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தனர். அது சம்பந்தமான அரசியல் தலைமைகளின் நகர்வுகளை அவர்கள் நன்கு அனுபவித்தனர். ஏனெனில் இதன் முடிவுகள் எவ்வாறு இருப்பினும் அதனால் இறுதி வெற்றியை அடையப் போவது வழமைபோல் பயங்கரவாத விடுதலைப் புலிகளாகிய தாங்களே தவிர சாதாரண தமிழ் மக்கள் அல்ல என்பதையும் புலிகள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தனர்.
லத்தீப் பாரூக்
(முற்றும்)