மனித உரிமை மீறப்படும் போது அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, வலுவான ஒரு பாக்கச் சார்பற்றதும் சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கக்கூடிய ஒரு நிறுவக ரீதியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என பொது அரச கொள்கை ஆய்வாளரும் மனித உரிமை ஆர்வலருமான எஸ். பாலக்கிருஷ்ணன் கூறுகின்றார்.
இலங்கையில் பல தசாப்தகாலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உரிமைகள் தொடர்பிலும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும் அவருடனான நேர்காணலின் போது,
கேள்வி: நல்லாட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்பட்டது. தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்குங்கள்?
பதில்: நல்லாட்சி என்பது எமது நாட்டில் ஒருபோதும் இருக்கவில்லை. அது வெறும் சுலோகம் மட்டும் தான். இதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் நல்லாட்சி என்பது ஒரு பரந்த விடயம்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஷவுடனான தனிப்பட்ட பகைமைக் காரணமாக ஒரு அபேட்சகர் தேவையென்பதற்காக அவரைக் கொண்டுவந்து ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தியபோதும் மகிந்த ராஜபக்ஷ காலத்தின் இழைக்கப்பட்ட ஊழல்களை மட்டும் வைத்துக்கொண்டு நல்லாட்சி என்ற சுலோகத்தை முன்வைத்தார்கள்.
அதே நேரம் அந்த நல்லாட்சி என்ற சுலோகத்தோடு வந்த அரசாங்கம் சில மாதங்களிலே மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பாரிய ஊழலை ஏற்படுத்தியிருந்ததிலிருந்து இங்கே நல்லாட்சி என்ற பதம் எதற்கும் ஒத்துவராது என்துடன் இலங்கையில் நல்லாட்சி என்ற ஒன்று இல்லை என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளை கைது செய்து ஒரு குறிப்பிட்ட ஒரு காலத்திலேயே அவர்களுக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். அவர்களை விடுவிப்பதற்கான நீதித்துறை விசாரணையும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஏனென்றால் அந்த கைதிகளைப் பொறுத்தவரையில் எந்தவொரு குற்றத்தின் அடிப்படையிலும் அரசாங்கத்தினால் நிரூபிக்கப்பட முடியாதவர்களே.
ஆகவே எந்தக் குற்றங்களும் செய்யாத இவர்களை அரசாங்கம் ஏன் தடுத்து வைத்திருக்கின்றார்கள் என்றால் இந்த அரசாங்கத்தின் இனவாத அரசியலுக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை.
ரணில்- மைத்திரி நல்லாட்சிக் காலத்தில் தமிழர் தேசிய முன்னணி எந்த விதமான நிபந்தனைகளுமின்றி இவர்களுக்கு முழுமையான ஆதரவை அளித்து வந்ததுடன் சுமந்திரன் மும்முரமாக அந்த முன்னணியிலிருந்து ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல மனித உரிமைகள் தொடர்பில் கூக்குரலிட்டு வந்த மனோ கணேசன் இந்த ஆட்சியில் அமைச்சுப் பதவியை வகித்திருந்தமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் கைதிகளுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.
அப்படி வழக்கு தொடுப்பதற்கு ஆதரவு இல்லாதவர்கள் விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்பதுடன் இந்த தமிழ் அரசியல்வாதிகளால் ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
அமைச்சுப் பதவிகளில் அங்கம் வகித்த தமிழ் அரசியல்வாதிகள் வெறும் வாய்ப் பேச்சு வீரர்களாகவே இருந்தார்கள். இந்த பிரச்சினைகளை அந்த நேரத்திலேயே தீர்த்து வைத்திருக்க முடியும்.
கேள்வி: தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்காக எவ்வாறான சாத்தியமான பொறிமுறைகள் உள்ளன?
பதில்: தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட விடயம். ஆகவே அவ்வவ்போது ஆளுங்கட்சியினுடைய விருப்பு வெறுப்புக்கமைவாகவே இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. ஏனென்றால் அரசியல் கைதிகளை வைத்துக்கொண்டு இனவாதம் பேசுவதற்கு வாய்ப்புக்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலே அவர்கள் தொடர்ந்தும் இதை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
பொறிமுறைகள் என்னவென்றால் ஒன்று சட்டரீதியாக ஆட்கொணர்வு மனுவான்று போடப்பட்டு அதன்மூலமாக அவர்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதித்துறை மூலமாக அவர்களுக்கு தண்டனை வழங்கலாம் அல்லது தண்டணை வழங்க ஆதரவு இல்லாவிட்டால் நீதிமன்றம் மூலமாகத்தான் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றம் விடுதலை செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலைமையில் தான் இருக்கின்றது.
கேள்வி: இராணுவ அத்துமீறல், போர்க்குற்றம் விளக்கத்திற்கும் அரசியல் கைதிகள் விவகாரத்திற்கும் இடையில் என்ன தொடர்பிருக்கிறது?
பதில்: போர்க்குற்றங்கள், இராணுவ அத்துமீறல்கள், போர்குற்ற விசாரணைகள் என்பதில் இந்த அரசியல் கைதிகள் என்பது ஒரு சிறிய விடயம் தான்.
போர்க்குற்றங்கள் என்பது பாரிய விடயமாகும். இது ஆயுத முரண்பாட்டு காலத்திலேயே நடைபெற்ற எல்லா சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டது. போர்குற்ற விசாரணைகள் நடைபெறுவததாக இருந்தால் அதுவொரு நீண்ட விடயம். ஏனென்றால் பல நாடுகளில் 2, 3 வருட காலங்கள் எடுக்கப்படுகின்றன.
என்ன பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் நானும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். தென்ஆபிரிக்கா, வடக்கு அயர்லாந்து போன்ற பல நாடுகளுக்கு சென்று இந்த முரண்பாட்டுக்கு பிந்தைய தீர்வு நடைமுறைகளை ஆராய்ந்து ஆய்வு செய்திருக்கின்றேன்.
இது பற்றின பல புரிதல்களுடன் இலங்கையில் பலர் இருக்கின்றார்கள். சர்வதேச நிறுவனங்களும் இருக்கின்றன பல உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த போர்க்குற்ற விசாரணை எனும் கூறும் போது, இந்த ஆயுத முரண்பாட்டுக் காலத்திலேயே இரண்டு குற்றவாளிகள் இருக்கின்றார்கள் ஒன்று அரசாங்க இராணுவம், மற்றையது விடுதலைப் புலிகளின் ஆயுத போராளிகள் இதில் இரு தரப்பினரும் போர்க் குற்றங்களை செய்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆகவே இந்த இருதரப்பினரின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டுமேயானால் ஒன்று அரசாங்கம் இந்த விசாரணைகளை நடத்துவதற்கு ஏனையோருடன் இணைந்து இணக்கப்பாட்டுடன் அதற்கான விசாரணை பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் அதனை செய்ய மாட்டார்கள், ஏனென்றால் இவர்களை பொருத்தவரையில் போர் முடிந்தவுடன் முரண்பாடுகள் முடிந்தது என்று இருந்துவிட்டார்கள். இலங்கையில் இன முரண்பாடு ஒன்று இருக்கின்றதென்பதைக்கூட அவர்கள் அந்த பதத்தைக் கூட பயன்படுத்த தயாராகவில்லை.
இன முரண்பாட்டின் ஒரு விளைவே போர்தான் என்று அவர்கள் ஏற்கத் தயாரில்லை. போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்கள், அநீதிகள், இரு தரப்பிலும் ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக ஜக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை முன்வைத்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி அதன்மூலமாக சர்வதேச ரீதியாக ஒரு விசாரணைகளை ஆரம்பிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் ஜக்கிய நாடுகள் சபை கட்டமைப்பிலே இருக்கின்றது.
ஆனால் பாதுகாப்பு சபையில் எந்தவொரு தீர்மானமும் ஒரு நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்படும் போது முக்கியமான 5 நாடுகளுக்கு (அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா, சீனா) ரத்து அதிகாரங்கள் (வீட்டோ) இருக்கின்றது.
ஏதேனும் ஒரு நாட்டுக்கு சார்பாக இந்த ஐந்து நாடுகளில் ஒன்று தன்னுடைய ரத்து அதிகாரத்தை பயன்படுத்தும் போது அங்கு பாதுகாப்பு சபையிலே அந்த தீர்மானம் ரத்தாகிவிடும் அந்த வகையிலேதான் இலங்கைக்கு ரஷ்யாவும் சீனாவும் சார்பாக இருப்பதன் காரணமாக இப்படியான தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது.
எனவே போர்க்குற்ற விசாரணை என்பது, இனி எவ்வளவு காலம் செல்லும்? எப்போது நடைமுறைப்படுத்தப்படும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கான கடமைப்பாட்டுடைய ஒரு அரசாங்கம் வருமேயானால் மட்டுமே அது நடைமுறைப்படுத்தப்படும்.
கேள்வி: (அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இராஜாங்க அமைச்சரால் அராஜகத்துக்கு உட்படுத்தப்பட்டமை) இவ்வாறான செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் கேள்விக்குறியாகியுள்ளது. அதுபற்றி?
பதில்: அரசியல் கைதிகளின் பாதுகாப்பு எனும்போது அனைவருக்கும் தெரிந்ததொரு விடயம் 1983 ஆம் ஆண்டு 2 சம்பவங்களின் அடிப்படையில் 55 அரசியல் கைதிகள் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
ஆனால் இதுவரைக்கும் அந்த சம்பவம் தொடர்பில் எந்த விதமான விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்தச் சம்பவம் கூட ஒரு போர்க்குற்ற அங்கமாகவே இருக்கின்றது.
10 வருடங்களுக்கு முன்னர் ரங்கஜீவ என்ற பொலிஸ் அதிகாரியும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரியுமான பலரும் இணைந்து இராணுவ உதவியுடன் ஒரு பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு அந்த பெயர்களைக் கொண்ட கைதிகளை அழைத்து வெலிக்கட சிறைச்சாலையில் சுட்டுக்கொன்ற சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட எந்தவொரு அநீதிக்கும் விசாரணை நடக்கவில்லை.
இந் நிலையில் கையில் ஒரு துப்பாக்கியுடன் இராஜாங்க அமைச்சரை சிறைச்சாலைக்கு அனுமதித்தது தவறாகும். அபபடியிருக்கும் போது அரசியல் கைதிகளை முழந்தாழிட்டு மிரட்டியமையானது பெரும் குற்றமாகும்.
உண்மையில் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி இருந்திருக்குமேயானால் குறித்த அமைச்சர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கு பதிலாக என்ன செய்தார்கள் என்றால் ஒரு விசாரணைக்குழுவொன்றை அமைத்தார்கள்.
குறிப்பாக இலங்கையில் இவ்வாறான விசாரணைக்குழுக்கள், ஆனைக்குழுக்களை நியமிப்பது. காலம்தாழ்த்தி பிரச்சினைகளை கண்துடைப்பு செய்வதற்காகவே. இதுவே வேறு நாடுகளில் இதுபோன்று சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக பதவி விலக்கி அல்லது கைது செய்து குற்றவியல் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றிருக்கும்.
ஆனால் குறித்த இராஜாங்க அமைச்சரரை மகிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சுப் பதவியை மட்டும் இராஜினாமா செய்துவிட்டதுடன் இன்னுமொரு அமைச்சுப்பதவியுடன் தான் அவர் இன்னமும் ஆட்சியில் உள்ளார்.எனவே இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு என்பது உத்தரவாதமளிக்கப்பட்டதல்ல.
அப்படியான ஒரு பாதுகாப்பு நிலைமை தமிழ் கைதிகளுக்கு இல்லை என்றே கூறலாம். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். 1977, 1981, 1983, போன்ற இனக்கலவரங்கள் போன்ற அரசாங்கத்துக்கு தேவையானால் அப்படியான கலவரங்களை உருவாக்கி இந்த பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம். அதேபோல தான் சிறைச்சாலைகளிலும்.
ஏனென்றால் இந்த முழு நாடுமே அரச நிர்வாகம் என்பது சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் அனுசரணையுடன் இனவாதமயப்படுத்தப்பட்ட ஒரு அரசாட்சியாகவே இருக்கின்தே ஒழிய இங்கே பல்லின பாங்கான ஒரு முறையான ஆட்சி கொள்கையளவிலோ அரசியல் அளவிலோ சட்டரீதியாகவோ இல்லை.
அது வரும் வரைக்கும் சட்டத்தின் ஆட்சி நிலை நாட்டப்படும் வரையில் இந்த அரசியல் கைதிகள் பாதுகாப்பு ஈழத்தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாம் செய்ய முடியாது என்பது கடந்த கால சம்பவங்களின் போது உணர்ந்துகொள்ள முடியம்.
தமிழ் அரசியல்வாதிகள் தற்போது ஆட்சியிலிருந்தாலும் அவர்களின் விடுதலைக்கு குறித்த முயற்சிகள் தொடர்பில் முன்னேற்றம் உள்ளதா?
பதில்: தமிழ் அரசியல் சக்திகள் அரசாங்கத்தில் இருந்தாலோ அல்லது எதிர்க் கட்சியில் இருந்தாலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் என்பது ஒரு அரசியல் சுலோகம்.
அவர்களுக்கு வாக்கு வேட்டையாடுகின்ற சுலோகமாகத்தான் இருக்கின்றதே ஒழிய ஆக்கப்பூர்வமான ஒருபோராட்டத்தையோ அல்ல நடைமுறைகளையோ இந்த தமிழ் அரசியல் தலைவர்கள், மேற்கொள்ளவில்லை என்பது தான் கூறுவேன். இவர்களுக்கு இதுவொரு அரசியலுக்கு பயன்படுத்தப்படும் உதைப் பந்தைப்போன்று தான்.
கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக, மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து உங்கள் கருத்து?
‘ பயங்கரவாத தடைச் சட்டமானது முற்று முழுதாக மக்களின் உரிமைகளை மீறுகின்ற ஒரு சட்டமாகும்.
இதில் இலங்கையில் உள்ள சாதாரண சட்ட ஆட்சியை எடுத்துக் கொண்டால் தவறு செய்த ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யப்படும் போதோ அல்லது கைது செய்யப்படும் போதோ அவர் நிரபராதி அல்லது சந்தேக நபராகத் தான் கைது செய்யப்படுகின்றார்.
ஆகவே நீதிமன்றத்திலே அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி அல்ல. ஆனால் இந்த பயங்கரவாத தடைச்சட்ட நடைமுறைகளை பார்க்கும் போது, கிட்டத்தட்ட 7000இற்கும் மேற்பட்ட கைதுகள் தொடர்பாக சட்ட உதவிகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தியுள்ளேன் என்ற முறையில் கூறுவதென்றால் இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது எந்தவித காரணமும் இல்லாமல் ஒருவரை 18 மாதங்கள் தடுத்து வைப்பதற்கான அங்கீகாரம் ஒரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதற்கமைய அந்த உத்தரவிற்கு அவர் கையொப்பமிட்டால் எந்தவொரு நபரையும் 18 மாதங்கள் விசாரணையின்றி தடுத்து வைத்திருக்கலாம்.
அதேநேரம் கைதிகள், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் பலவந்தமாகவோ அவல்லது வேறுவிதமாகவே ஒப்புதல் வாக்குமூலம் பெறும் போது இந்த ஒப்புதல் வாக்குமூலம் அநேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சாட்சியங்களாக நீதிமன்றத்திலே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த சாட்சியங்கள் பெறுவது சித்தரவதை செய்வது, பலவந்தமாக பெற்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தால் இந்த சாட்சியங்கள் செல்லுபடியாகாது என முடிவு செய்யப்படும். அப்படி முடிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் என நிரூபிக்க முடியாததால் பலர் விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
பயங்கரவாத தடைச்சட்டமானது உலகிலே காணப்படுகின்ற மனித உரிமைகளை ஒடுக்குகின்ற மனித உரிமை மீறுகின்ற ஒரு பயங்கரமாக சட்டமாகும்.
அதற்கமைய இந்த சட்டத்தை நடைமுறையில் வைத்துக்கொண்டு எவரேனும் ஒருவர் கருத்து தெரிவித்தாலே அல்லது அரசாங்கத்துக்கு எதிராக ஏதேனும் கருத்தை பதிவிட்டாலே கூட இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றார்கள்.
அடுத்ததாக எமது நாட்டின் இன்னுமொரு சிறுபான்மையினத்தவராக முஸ்லிம்களுக்கு எதிராக அஹ்னாப் என்ற இளைஞன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி அசாத்சாலி ஆகியோரும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஆகவே எப்படி இந்த பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு மனிதனின்; சுதந்திரத்தையும் உரிமையையும் மீறுகின்றது என்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம்தான் இந்த பயங்கரவாத தடைச்சட்டம்.
கேள்வி: மனித உரிமைகள் தொடர்பில் எமது நாட்டின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்கள் கருத்து?
பதில்: மனித உரிமை மீறுல்கள் என்பது எமது நாட்டுக்கு புதிய விடயமல்ல. நாட்டில் மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடர்ச்சியாக மீறப்பட்டுத்தான் வருகின்றது.
விசேடமாக 1970 ஆம் ஆண்டு ஜே.வி.பியினுடைய ஆயுத கிளர்ச்சியைத் தொடர்ந்து கூடுதலாக இந்நாட்டிலே கூடுதலாக அவசரகால விதிமுறைகளின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது.
அவ்வாறு அவசரகால விதிமுறைகளின் ஆட்சி செய்யப்படும் என்பது இங்கு சாதாரண சட்டங்கள் இடை நிறுத்தப்படுகின்றன. மக்கள் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், கருத்து சுதந்திரம், போன்ற பல்வேறு விடயங்கள் இடைநிறுத்தப்பட்டு அவசரகால விதிமுறைகளின் மூலம் பலாத்காரமாக கைது செய்வது, கூட்டங்களை தடை செய்வது, கருத்து சுதந்திரத்தை மறுப்பது போன்ற சம்பவங்களுக்கு பொலிஸாருக்கும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதுதான் இந்த அவசரகால சட்டம்.
மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இலங்கையில் நிவாரணம் பெறுவதற்கான இருக்கின்ற வாய்ப்பு உயர்நீதிமன்றம் மட்டும்தான்.
யாரேனும் ஒருவருடைய மனித உரிமை மீறல் அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறையால் மீறப்படும் போது அதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்திலே அதுவும் சம்பவம் ஏதேனும் குறித்த சம்பவம் நடைபெற்று 30 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றத்திலே மனித உரிமை மீறல் தொடர்பாக வாதிடும் சட்டத்தரணிகள் பெரும் தொகையான பணத்தை பெறுபவர்களாவர். அப்படியில்லையேல் மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்து அவர்களின் தீர்க்கப்படாவிட்டால் அவர்களாலேயே உயர் நீதிமன்றத்திற்கு எந்த காலத்திலும் செல்லலாம்.
இந்த இரண்டு வாய்ப்புக்களும் இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற செயற்பாடுகள். ஆனால் மனித உரிமை மீறல்களுக்குட்படுத்தப்பட்ட அநேகமானவர்கள் விசேடமாக பொலிஸ் அதிகாரிகளால் மீறுப்பட்ட அநேகமானவர்கள் இந்த நடைமுறையினை பயன்படுத்த முன்வருவதில்லை. காரணம் அவர்களும் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல் செயற்பாடுகள் ஏற்படும் என்று.
இதேவேளை முன்பிலிருந்து ஜக்கிய நாடுகள் சபையில் வருடாந்தம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற விடயம்.
ஜக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பற்றி பேசப்படும் போது இலஙகை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலரவற்றை ஏற்பார்கள் சிலவற்றை மறுப்பார்கள். அடுத்த முறை வரும்போது சரிசெய்வதாக வாக்களிப்பார்கள். அடுத்தவருடம் அதே மனித உரிமை மீறுல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
எங்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் சபையிலே நிறைவேற்றப்பட்ட மனித உரிமை சாசனங்கள் அல்லது மனித உரிமை பிரகடனங்கள் பெரும்பாலானவற்றை இலங்கை அரசாங்கம் வாக்களித்து நிறைவேற்றுவதற்கு துணைபுரிந்திருக்கின்றதுடன் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆகவே இலங்கை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொண்ட மனித உரிமை தராதரங்களை அடிப்படையிலே அந்நாட்டு மக்களுக்கு அந்த மனித உரிமை தராதரங்களை அனுபவிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி அதற்கான சட்டங்களை தயாரித்து நிறுவகங்களை உருவாக்கி அதறகான உத்தரவாதங்களை வழங்கவேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கடப்பாடு.
எனவே ஜநா சபையில் மனித உரிமை தொடர்பாக பல்வேறு பிரகடனங்களையும் ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டாலும். நாட்டுக்குள்ளே அரச யாப்பிலே குறிப்பிட்டுள்ள அடிப்படை மனித உரிமை மட்டும் தான் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய பொருளாதார அபிவிருத்தி உரிமைகள் சமூக பொருளாதார உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பல்வேறு உரிமைகளும் அரச யாப்பு ரீதியாக உத்தரவாதம் வழங்கவில்லை.
ஆகவே மனித உரிமை தொடர்பாக இந்நாட்டில் உள்ள மக்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் இருக்கின்ற முதலாவது கடமைப்பாடு எங்களின் மனித உரிமைகள் தொடர்பான சரியான சட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
சர்வதேச தாரதரத்துக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு தராதரங்களுக்கு அமைவாக எல்லா உரிமைகளும் உத்தரவாதமளிக்கப்படவேண்டும். உதாரணமாக தென் ஆபிரிக்காவைப் போன்று மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக காவற்துறையினர் பயிற்றுவிக்கப்படவேண்டும்.
மனித உரிமை மீறப்படும் போது அதற்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு வலுவான ஒரு பாக்கச்சார்பற்ற சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கக்கூடிய ஒரு நிறுவக ரீதியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
அதற்கு தகுந்த அடிப்படையில் நீதிமன்றங்களிலே நீதிபதிகள் பயிற்றுவிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கடமைப்பாடு வலுப்படுத்தவேண்டும். இவ்வாறான நடைமுறைகளை மேம்படுத்தினால்தான் மனித உரிமை மீறல்களை குறைக்கலாம்.
அதைப்போல பரந்த அடிப்படையிலேயே எல்லா மனித உரிமைகள் எல்லோருக்கும் என்று சொல்லுகின்ற மனித உரிமை சம்பந்தமாக இருக்கின்ற சுலோகத்தை சரியாக இருப்பதற்கு இத்தகைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கேள்வி: அரசியல் கைதிகள் விடுதலையாவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து?
பதில்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எல்லா கைதிகளும் இயல்பாகவே விடுதலை அடைவார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் சுமந்திரன் உள்ளிட்டோர் இணைந்து செயற்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் கோரிக்கை. அதற்காக புதியதொரு சட்டத்தை தயாரித்தார்கள்.
அதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட பயங்கரமான ஒரு மாற்று சட்டத்தை தயாரித்தார்கள். அதற்கமைய அந்த மாற்றுச்சட்டத்தை தயாரித்த பின்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்திலே இருக்கக்கூடிய (தேடுதல், கைது, விசாரணை, கண்காணிப்பு ஆகிய அதிகாரங்களை பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் வழங்குவது உட்பட ஜனநாயக வெளிகளை ஒடுக்குகின்ற தன்மையுடைய இத்தகைய சட்டமூலம்) அந்த சட்டத்திற்குட்படுத்தப்பட்டு இன்னுமொரு அடக்குமுறைகளுக்குட்படுத்தப்பட்டது.
அவர்கள் தாயரித்த மாற்றுச்சட்டம் பராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. ஆகவே இலங்கை போன்ற நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான எந்தவொரு தேவையுமில்லை.
ஏனென்றால் ஒரு பயங்கரவாத சவால் இருக்குமேயானால் அது அரச பயங்கரவாதத்தின் சவாலே ஒழிய வேறு எந்தவொரு அரச சார்பற்ற எந்த அமைப்புகளிலும் அப்படியான சவால்களும் காணக்கூடியதாக இல்லை.
கேள்வி: அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாடுகளில் மனித உரிமை அமைப்புகளின் பங்களிப்பு எவ்வாறுள்ளது?
பதில்: ஆம் ஒரு செயற்பாடு தான், அரசியல் கைதிகள் உட்பட இந்த விடயங்களை மக்கள் மத்தியில் பரப்பி மக்கள் ஆதரவை திரட்டி அதை ஒரு அரசியல் மட்டத்திலான அழுத்ததிற்கு பயன்படுத்த முடியும்.
இரண்டாவது, மனித உரிமை அமைப்புகளில் சட்டரீதியாக உதவி செய்கின்ற அமைப்புக்கள் வழமையாக இந்த அரசியல் கைதிகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று வழக்குகளைத் தொடர்ந்து அதற்கான வளங்களைத் தேடி அந்த நீதிமன்றம் மூலமாக இவர்கள் அவர்களுக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்லது குறைந்த பட்ச தண்டனையைப் பெற்று விடுதலை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கலாம்.
இதற்கான நடைமுறைகள் கிட்டத்தட்ட கடந்த தசாப்தகாலங்கள் சில மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொண்டுதான் வருகின்றது. இதைவிடுத்து இந்த விடயங்கள் தொடர்பாக பேசப்படும் போது அரசியல் கைதிகள் விடுதலை என்பது ஒரு மனித உரிமை அமைப்புக்களால் மேற்கொள்ள குறுகிய சில செயற்பாடுகள் தான் உள்ளது.
இது ஒரு அரசியல் கடமைப்பாடு உள்ள ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தி அந்த அரசாங்கத்தின் மூலம் அரசில் தீர்வாக எடுத்துத்தான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
முதலாவதாக குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்ற விசாரணைகளுடன் குற்றவாளி என ஏற்றுக்கொண்டால் தீர்ப்பு வழங்கி அதற்கான தண்டனை வழங்கப்பட்டு விடுதலை செய்யலாம்.
அல்லது எந்தவிதமான குற்றங்களும் நிரூபிக்காமல் வைத்திருக்கின்ற கைதிகளை உடனடியாக விடுதலை செய்வது போன்றவற்றை மேற்கொள்வதற்கு மனித உரிமை அமைப்புக்களால் செயற்படுத்தக்கூடிய நடவடிக்கை அல்ல. ஆனால் அழுத்தங்களை மேற்கொள்ள முடியும்.
தர்ஷிகா செல்வச்சந்திரன்