மொட்டு அரசு இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

Date:

இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

தப்தர் ஜெய்லானி போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னுள்ள தொன்மைவாய்ந்த பள்ளிவாயலாகும். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களுள் இதுவும் மிக முக்கியமான ஒன்று. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் பலவுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாருக் இது தொடர்பாக சிறந்ததொரு கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தப் பள்ளிவாயல் குறித்து இரத்தினபுரி கச்சேரியில் பணிபுரிந்த ஆங்கிலேய அரசாங்க அதிபர்கள் தமது தினக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள். எச்.மூயாட்ஸ் 13 ஜனவரி 1857 இலும், எச்.வேஸ் 20 மார்ச் 1887 இலும், ஆர்.பி.ஹெலிங்கஸ் 12 பெப்ரவரி 1910 இலும் தமது டயரியில் ஜெய்லானி பள்ளிவாயல் குறித்து பதிவு செய்துள்ளார்கள்.

அதேபோல ஜீ.கூக்ஸன் 12 ஜனவரி 1911 இலும், ஆர்.என்.தைனி 26 மார்ச் 1914 இலும், ஜீ.எச்.கொலின்ஸ் 1922 இலும் தமது டயரியில் இப்பள்ளிவாயல் குறித்து பதிவு செய்துள்ளார்கள். இதனை விட இப்பள்ளிவாயலின் தொன்மை குறித்த குறித்த இன்னும் சில வரலாற்று ஆதாரங்களும் உள்ளன.

இது இவ்விதமிருக்க சிறிமா அம்மையாரின் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1971 இல் தான் இங்கு தாதுகோபுரம் அமைக்கப்பட்டது. அப்போது கலாசார அமைச்சின் செயலாளராக இருந்த கலாநிதி நிசங்க விஜேரத்ன இதனை நிர்மானித்ததோடு அவர்தான் இந்தத் தாதுகோபுரத்திற்கு 2000 வருட வரலாறு உண்டு என்றும் குறிப்பிட்டார்.

21 ஜனவரி 1971 தவச பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் கிரியல்ல ஞானவிமல தேரோ கூரகலயில் புதிதாக தாதுகோபுரம் நிர்மானிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொல்லியல் பிரதி ஆணையாளர் சார்ல்ஸ் கொடகும்புரவுடன் 5 தடவை இப்பகுதிக்கு விஜயம் செய்து பரிசீலித்ததாகவும் எனினும், அங்கு பௌத்த கலாசாரத்துக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இதற்கு முன் அங்கு தாதுகோபுரம் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

13 செப்டம்பர் 1973 இல் தொல்லியல் திணைக்களம் 3 மொழிகளிலும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூரகலயில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சுச் செயலாளராக இருந்த போது அவரது ஆசிர்வாதத்துடன் தடம் பதித்து இன்றும் அவரால் போசிக்கப்பட்டு வரும் ஞானசார தேரர் தான் வெசாக் கொண்டாட்டத்தை கூரகலயில் கொண்டாட வேண்டும் என்ற கோசத்தை 2013 மார்ச் 17 இல் முன் வைத்தார். இந்தக் கோசத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் செயற்பாடுகளையே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ தற்போது முன்னெடுத்து வருகின்றார்.

இதன் பிரதிபலிப்பு தான் தற்போது இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தொன்மைவாய்ந்த ஜெய்லானி பள்ளிவாயல் மினாரா அழிப்பாகும். ஜனாதிபதி இவ்வாறு உறுதியாகச் செயற்படுவதற்கு அவருக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமுகம் மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு ஆதரவாக வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி ஜனாபதிக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தமையே இதற்கு காரணம். இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தைப் பற்றி அக்கரையின்றி செயற்பட்டதன் விளைவுகனையே இப்போது நாம் அனுபவித்து வருகின்றோம்.

இந்த அரசினால் முஸ்லிம்களுக்கு என்ன அநியாயங்கள் நடந்தாலும் இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பன்மையைக் கொடுத்து இன்னமும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

காபட் வீதிக்கும், கொன்ரக்ட்களுக்கும் சோரம் போகாது சமூகத்தின் பாதிப்புகள் குறித்து பேச இவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கண்ணைக் குத்தியபின் வரையப்படுகின்ற அழகிய ஓவியங்கள் எமக்கு எந்தப்பலனும் தரப்போவதில்லை. இதேபோலத்தான் சமுகத்திதன் இருப்புக்கான ஆதாரங்களை அழித்து சிறுசிறு சலுகைகளைப் பெற்றுக் கொள்வதால் சமுகத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...