உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக் காரணமாக அண்மைக்கால முன்னேற்றங்களின் பின்னணிகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 இலங்கை மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள 14 மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உக்ரைனில் உள்ள அனைத்து இலங்கை பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, உக்ரைனின் கிழக்கு பகுதியிலுள்ள இரண்டு பகுதிகளை சுதந்திர குடியரசுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அறிவித்துள்ள நிலையில் பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.