உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போர் பதற்ற நிலைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சு, அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு உழைக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை இலங்கை வலியுறுத்துவதாக அமைச்சு மேலும் கூறியது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கைக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவியதன் பின்னர் இலங்கையில் சுற்றுலாத் துறை மீள் எழுச்சி பெற்று வருகின்றது.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர்.
அதேவேளை ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளும் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் இரண்டு பிரதான வாடிக்கையாளர்களாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்த போர் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.