ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் திருமதி அழகியான புஷ்பிகா டி சில்வா, இன்றையதினம் வருகைத் தரவில்லை என ‘த மோர்னிங்’ ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், புஷ்பிகா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகாததால் வேறொரு நாள் வருகைத்தர மாற்றுத் திகதியை கோரியுள்ளார்.
இதன்போது, ‘இன்று காலை 10 மணியாகிய நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் புஷ்பிகா டி சில்வா வரவில்லை. அதற்குப் பதிலாக, சரியான காரணத்தை மேற்கோள்காட்டி, மாற்றுத் திகதிக்கான கோரிக்கையை அவர் அனுப்பியுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் குறித்த ஊடகத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புஸ்பிகா டி சில்வாவிடம், அழைப்பு பதிவுகள் பற்றிய விரிவான விசாரணைகளின் போது, சந்தேகத்தை எழுப்பும் வகையில் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் இருப்பதால், அவரை விசாரணை செய்வது முக்கியமானது என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், ‘சமுதிதவின் வழக்கு தொடர்பான விரிவான விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பல்வேறு நபர்களிடையே தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளன.
எனவே, அவரை அறிக்கையை சமர்ப்பிக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம் என்றும் அவர் என்று அவர் கூறினார்.
முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகாவுடன் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம நேர்காணல் ஒன்றை நடத்தியிருந்தார்.
அதன்போது, அவர் திருமதி உலக அழகுராணி போட்டி மற்றும் அதில் பங்கேற்ற உள்ளூர் அமைப்பாளர்கள் தொடர்பான பல சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தினார்.
இந்த நேர்காணலைத் தொடர்ந்து, இலங்கையின் முதல் உலக திருமதி அழகுராணியான, ரோசி சேனநாயக்க, நேர்காணலின் போது தெரிவித்த கருத்துக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி புஷ்பிகாவுக்கு எதிராக நட்டஈட்டு கடிதமொன்றை அனுப்பினார்.
இதன் மூலம் புஷ்பிகா டி சில்வாவிடம் ஐந்நூறு மில்லியன் ரூபாவை அவர் நட்டஈடு கோரியிருந்தார்.
பிலியந்தலையில் உள்ள ஊடகவியலாளர் சமுதிதாவின் வீடு பெப்ரவரி 14ஆம் திகதி தாக்கப்பட்டதுடன், இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னணி அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.