கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று எரிபொருள் கப்பல்களை விடுவிப்பதற்கான போதிய நிதி அரசாங்கத்திடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஒரு எரிபொருள் கப்பலுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு மட்டுமே அரசாங்கத்திடம் பணம் இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கப்பலில் இருந்து பெற்றோலை இறக்குவதற்கு பணம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், டீசல் மற்றும் எரிபொருளைக் கொண்ட மற்ற இரண்டு கப்பல்களை விடுவிக்க போதிய நிதி இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எரிபொருளை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் அமெரிக்க டொலர்கள் இல்லையெனவும் இதனால் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மேலும் குறிப்பிட்ட அவர், எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னர் ஒரு எரிபொருள் நிலையத்துக்கு மூன்று எரிபொருள் பவுசர்கள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒன்று அல்லது இரண்டு எரிபொருள் பவுசர்கள் மட்டுமே அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.