ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை உட்பட நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
எரிபொருள் நிலையங்களில் கையிருப்பு இல்லாமல், போக்குவரத்தில் சிக்கித் தவித்ததால், பல பொதுமக்கள் கொந்தளிப்புடன் காணப்பட்டனர்.
நாட்டில் பல எரிபொருள் நிலையங்களில் டீசல் இருப்பு இல்லை, சூப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் மட்டுமே கிடைக்கும் எக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த நுகர்வோர், தேவையான எரிபொருளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எரிபொருளை கொள்வனவு செய்யும் போது தலா ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாவுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படுவதுடன் கார்கள் மற்றும் பேருந்துகளுக்கு அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.
நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்யும் போது, இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.