தேசிய நீரோட்டத்தில் பயணித்த மர்ஹூம் பௌசுல் காலித் ;என். எம். அமீன்( சிரேஷ்ட ஊடகவியலாளர்)

Date:

பிரபல சமூக, அரசியல் செயற்பாட்டாளர் பௌசுல் காலீத் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி தனது 78ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு அரசியல், சமூக செயற்பாடுகளில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாகப் பணிபுரிந்த பௌசுல் காலீத், தர்காநகர் பொது சுகாதார உத்தியோகத்தர் எச்.எம்.காலீத் மற்றும் தர்காநகர் மத்திய மகளிர் கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்த பாத்திமா காலீத் தம்பதியினரின் புதல்வராவார்.

கொழும்பு மகளிர் கல்லூரி, இசிபதன கல்லூரி, பெம்புருக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், பல தனியார் நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்தார். கொழும்பு மகளிர் கல்லூரியில் இவர் படிக்கும்போது காலஞ்சென்ற அமைச்சர்களான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோர் இவரது சக வகுப்புத் தோழர்களாவார்கள்.

காலஞ்சென்ற கலாநிதி ரி.பி.ஜாயாவின் மகனான மர்ஹும் டோனி ஜாயாவின் மகளான சஸ்னாவைத் திருமணம் முடித்த இவர், பம்பலப்பிட்டியில் வாழ்ந்து வந்தார். இவரது வாரிசாக ஒரே மகள் செருஸா ஆவார்.

ஆரம்பத்திலிருந்தே சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், 1963 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயற்குழுவில் பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். 2001 இல் கொழும்பு மாநகர சபைக்கு ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு சிறியதொரு வாக்குத் தொகையில் தோல்வியுற்றார்.

இசிபதன கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான இவர், நீண்ட காலம் அதன் செயலாளர், உப தலைவர், தலைவர் பதவிகளை வகித்து அக்கல்லூரியின் இன்றைய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தார்.

முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மதுடன் நெருங்கிச் செயற்பட்ட இவர், மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்திலும் நீண்ட காலம் பணிபுரிந்தார். அமைச்சர் முஹம்மத் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருக்கும்போது அந்த அமைச்சின் ஊடாகச் செயலாளராகவும் பணிபுரிந்தார்.

லயன்ஸ் கழகம், ஜேசின் கழகம் போன்றவற்றில் பிரதான பதவிகளை வகித்து, 1970களில் ஜெனிஸ் இயக்கத்தின் செயலாளர் நாயகமாகவும் இவர் தெரிவானார்.1982 இல் ஜேசின் இயக்கத்தின் தேசியத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

எல்லோரிடமும் சிரித்து அன்பாக பழகும் இவர், கொழும்பில் மர்ஹும் ரி.பி. ஜயா நினைவாக ஒரு மண்டபத்தை நிர்மாணிப்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டார். அதற்காக கொழும்பு ஆனந்தாக் கல்லூரி முன்னாலிருந்த ரி.பி.ஜாயா நினைவு மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்த காணியை அதை அத்துமீறிப்பிடித்திருந்தவர்களுடன் வழக்குப் பேசி வென்றெடுப்பதில் முக்கிய பங்காற்றினார். ரி.பி.ஜாயா ஞாபகார்த்த அமைப்பின் தலைவராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உட்பட்ட செயற்குழுவுடன் இணைந்து பொருத்தமான இடம் ஒன்றைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே இவர் இறைவனடி எய்தினார்.

ஒரு காலத்தில் முஸ்லிம்களது தனிப் பெரும் அரசியல் இயக்கமான அகில இலங்கை முஸ்லிம் லீக்கில் நீண்டகாலமாக முக்கிய பதவிகளை வகித்த இவர், இறக்கும்போது அதன் செயலாளராகப் பதவி வகித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் முக்கிய தலைவர்கள் பலருடன் இணைந்து செயற்பட்ட இவர், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நகர்வுகள் பற்றி நன்கு அறிந்திருந்தார். இவரது சேவைகளுக்காக 1997 ஆம் ஆண்டில் சர்வதேச மார்ஷல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது.

மூத்த முஸ்லிம் தலைவர்களான டாக்டர் எம்.சி.எம் கலீல், எம்.எச். முஹம்மட், எம்.ஏ. பாக்கிர் மாக்கார் உட்பட்ட பல தலைவர்களுடன் நெருங்கி செயற்பட்ட இவர், ஏழைகளுக்கு உதவுவதிலும் தீவிர அக்கறை காட்டினார்.

சிங்கள, தமிழ் மக்களது உணர்வுகளை மதித்து என்றும் தேசிய நீரோட்டத்தில் பயணித்த ஒருவராகவே மர்ஹும் பௌசுல் காலீதின் வாழ்வு அமைந்திருந்தது.

 

 

Popular

More like this
Related

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் FOUR A’S ADVERTISING FESTIVAL

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising...

ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது இஸ்ரேலின் தாக்குதல்கள்: சபையில் சஜித்

பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு...

உயர்தர வகுப்புகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு...