(File Photo)
இலங்கை முழுவதும் இன்றைய தினம் அரச மருத்துவமனைகளில் தாதிமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டாளரான சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று காலை நாடு முழுவதும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த 17 தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
3 மாத காலமாக அரசாங்கத்திற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்றும் இதனால் தீர்வு கிடைக்கும் வரையில் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடருவோம் என்றும் சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்றைய சுகாதார ஊழியர்களின் போராட்டத்தினால் கொழும்பு அரச மருத்துவமனையில் காத்திருந்த மக்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாகினர்.
இதன்போது கருத்து தெரிவித்த மக்கள்’ தாங்களுக்கு வேலைநிறுத்தம் பற்றி முன்பே அறிவிருத்திருந்தால் வருகைத் தந்திருக்க மாட்டோம், தூரப் பிரதேசங்களில் இருந்து வருகைத் தருவதால் மிகவும் சிரமமாகவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வைத்தியர்களை தெய்வமாகவே கருதுகின்றோம் எனினும் தற்போது அவர்கள் கொலைகாரர்களாகவே காணப்படுகின்றனர் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை பெரும் எண்ணிக்கையான மக்கள் தங்கள் கிளினுக்குகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.