இலங்கை ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சிக்கு ஏற்ப மருந்துப் பொருட்களின் விலையை திருத்தியமைப்பதற்கு மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் நேற்று முதல் மருந்தகங்களுக்கு மருந்து வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி குறைப்பதற்கு தீர்மானித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.
மருந்து நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் தங்களிடம் உள்ள இருப்புகளில் இருந்து மருந்தகங்களுக்கு விநியோகிப்பதை ஏற்கனவே நிறுத்திவிட்டதாகலும், ரூபாயை மதிப்பிட்ட பிறகு, அந்த மருந்து விற்பனையாளர்கள் இலாபம் ஈட்ட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பெரும்பாலான மருந்து வகைகள் மற்றும் மூலப்பொருட்கள் கடனில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதனால், குறைந்த விலையில் அவற்றை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யும் போது உற்பத்தியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இதன் மூலம், அனைத்து மருந்தக உரிமையாளர்களையும் தங்கள் நுகர்வோருக்கு நிலைமையை விளக்கி, தற்போதுள்ள மருந்துகளை சிக்கனமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.