பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இடையே சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (28) அலரிமாளிகையில் நடைபெற்றது.
இதன்போது, 2014ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையம் இணைய தொழில்நுட்பம் ஊடாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரினால் அது மக்கள் மயப்படுத்தப்பட்டது.
வட மாகாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாசார நிலையத்தை இலங்கைக்கு கையளிக்கும் வகையிலான ஆவணங்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையே இணையவழி ஊடாக நடைபெற்ற இராஜதந்திர கலந்துரையாடலின் உடன்பாட்டிற்கு அமைய, பௌத்த மதத்தின் மறுமலர்ச்சி உள்ளிட்ட ஏழு விடயங்களுக்காக இந்திய அரசு வழங்கிய 15 மில்லியன் டொலர் தொகைக்கான ஒப்பந்த பரிமாற்றமும் இதன்போது இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
பௌத்த மதத்தை மேம்படுத்துதல், கலாசாரத்தை மேம்படுத்துதல், புத்த பிக்குமாரின் கல்வியறிவை மேம்படுத்துதல், இரு நாடுகளுக்கு இடையிலான யாத்ரீகர்களை மேம்படுத்துதல், நினைவுச்சின்னங்கள் கண்காட்சி உள்ளிட்ட ஏழு நோக்கங்களுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அரச உயர் அதிகாரிகள், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.