மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 இந்நாள் அனுசரிக்கப்படுகின்து.
காச நோய் காரணமாக உலகில் 1.7 மில்லியன் மக்கள் வருடந்தோறும் இறக்கின்றனர். இது ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாகவுள்ளது.
1882 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி டாக்டர் றொபேர்ட் கோச் என்பவர் காசநோய்க்கான காரணியை கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளான 1982 ஆம் ஆண்டில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் திகதியை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது.
எனவே உலக சுகாதார அமைப்பு 1996 ஆம் ஆண்டில் இருந்து காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக மார்ச் 24ஆம் திகதியை அறிவித்தது. உலக காச நோய் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலநிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள காசநோயாளர்களின் எண்ணிக்கை 14ஆயிரம் ஆகும். இவர்களுள் 10 ஆயிரம் பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை சுவாச நோய் விசேட வைத்தியர் சங்கம் அண்மையில் தெரிவித்துள்ளது.
இந்த நோய் தொடர்பில் சமூக மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகின்றது. இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவதன் மூலம் இதனை குணப்படுத்தமுடியும்.
கடந்த வருடம் 8 ஆயிரத்து 511 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 414 பேர் மட்டுமே நோயை முன்கூட்டியே அடையாளம் கண்டு சிகிச்சை பெற்றனர். அதன் அடிப்படையில் இரண்டு வார காலத்திற்குள் காசநோயை கட்டுப்படுத்துவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனவே, இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்படின் முன்கூட்டியே வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த நோயை முற்றாக குணப்படுத்தலாம்.
இலங்கையில் சராசரியாக 400 முதல் 500 நோயாளர்கள் வருடாந்தம் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர். நோயாளிக்கு அவசியமான சிகிச்சை மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்தலாம்.