அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாகவும், அரசியலமைப்புக்கு புறம்பாகவோ அல்லது அரசியலமைப்பை மீறியோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் விடுத்த எழுத்துமூலக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அந்தவகையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது