நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பொது போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி தொடர பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய ஆம்புலன்ஸ்கள், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து சேவைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கு மேலதிகமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கொண்டு செல்லும் வாகனங்களை எவ்வித இடையூறும் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.