நாட்டில் தேவையான நிதியின்மைக் காரணமாக மருந்துப் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் நாளாந்தம் 5000 நோயாளர்கள் உயிரிழக்கின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் கொலைக் குற்றவாளியாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இந்த அரசாங்கம் கொலைக் குற்றவாளி. அவர்கள் கொலைகாரர்கள். அவர்கள் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த நாட்டின் குடிமக்கள் மீது அக்கறை இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ‘அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையால் 5000க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். பணப் பற்றாக்குறையால் மருந்துகளை இறக்குமதி செய்ய முடியவில்லை.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு, அதிகாரப் பேராசையால்தான் கவலைப்படுகிறார்கள். அவர்களின் பேராசையின் காரணமாகவே இந்த அரசாங்கம் எமது குடும்பங்களை கொன்று குவிக்கிறது’ எனவும் அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, எரிபொருள் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போது, அந்த எதிர்க்கட்சியினர் சைக்கிளில் பாராளுமன்றம் வரை சென்றதாகவும், அதேசமயம், தற்போது அதைவிட இன்னும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.