ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ரம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
30,000 லீற்றர் எரிபொருள் அடங்கிய பௌசருக்கு ஒரு கும்பல் தீ வைப்பதைத் தடுக்க பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனால் பெரும் சேதத்தை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்ததா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
எரிபொருள் கொண்டு செல்லும் பவுசர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது சேதத்தை ஏற்படுத்தவோ வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.