ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ‘கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இது சம்பந்தமாக அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அனுப்பியிருந்த விளக்கம் பற்றி ஆராயப்பட்டது.
மூவர் அனுப்பிய விளக்கம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை இடம்பெறும். அதுவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவர்.
நஸீர் அஹமட் வழங்கியிருந்த விளக்கம் திருப்திகரமாக அமையவில்லை. உண்மைக்கு புறம்பான விடயங்களை அதில் குறிப்பிட்டுள்ளர்.
இதேவேளை இன்று மாலை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசுக்கு ஆதரவளித்து பின்னர் அதிலிருந்து வெளியேறிய மற்றைய எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.