பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், 40 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுப் படையுடன் சுயேட்சை நாடாளுமன்றக் குழு பல சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து குழு தற்போது ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையை 20 பேராக குறைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுயேட்சையான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவி கோரியதுடன், ரஷ்ய தூதுவர் கடந்த வியாழன் அன்றும், சீன தூதுவர் கடந்த வெள்ளிக்கிழமையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசித்தனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து விலகி புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு குழு பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் அதற்கு சாதகமாக பதிலளிக்காததால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சுயேட்சைக் குழு தெரிவித்துள்ளது.