ரம்புக்கனை மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் குழுவொன்று நாளை (22) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (மத்திய மாகாணம்), பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மத்திய மாகாணம்), எஸ்.எஸ்.பி (கேகாலை) மற்றும் கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் காலை 11.00 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களின் பணிப்புரையின் பேரில், ரம்புக்கனை போராட்டத்தை கட்டுப்படுத்தும் போது பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக இரண்டு பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர், சட்ட உத்தியோகத்தர் மற்றும் மனித உரிமை அதிகாரி உள்ளிட்ட விசேட குழுவொன்று ரம்புக்கனைக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதேச வாசிகள்;, போராட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள், சம்பவத்தைப் புகாரளிப்பதில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள், தடயவியல் நோயியல் நிபுணர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை சந்திப்பதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கி இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான பரிந்துரையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு வழங்கும் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.