அட்டுளுகம பிரதேசத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் பாத்திமா ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமியை தேடும் பணியில் நான்கு பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அட்டுளுகம பிரதேசத்தில் வசிக்கும் ஒன்பது வயது சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை (மே 27) காலை 10.00 மணி முதல் காணாமல் போயுள்ளார்.
உணவுப் பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதேநேரம், சி.சி.டிவி கேமராவில் இருந்து கிடைத்த காட்சிகளின் படி குறித்த சிறுமி உணவுப் பொருட்களை வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் சிறுமியின் நெருங்கிய உறவினர் மீது விசாரணை குழுக்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய காணாமல் போன சிறுமியின் தந்தையிடம் சம்பவம் தொடர்பாக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் அதிகாரியொருவர் நியூஸ் நவ் செய்திக்கு தெரிவித்துள்ளார்.
பாத்திமா ஆயிஷா காணாமல் போனது தொடர்பாக 20 பேரிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
எனினும் குறித்த சிறுமியின் தாய் ‘எனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள், எனது பிள்ளை எனக்கு வேண்டும், புண்ணியம் கிடைக்கும்’ என பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.