பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பு, ஈவிரக்கம், பாதுகாப்பில்லாத பூமியிலிருந்து பாத்திமா ஆயிஷா உயிரிழந்து மூன்று நாட்களின் பின்னர் சற்று முன் நல்லடக்கம் செய்யப்பட்டாள்.
அட்டுலுகம பெரிய பள்ளிவாசலில் பெருந் திரளான மக்களின் கண்ணீருடனான பிரார்த்தனையுடன் ஜனாஸா தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து இரவு இஷாத் தொழுகையின் பின்னர் சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் அரசியல் பிரமுகர்கள், சர்வமதத்தலைவர்கள் மற்றும் உள்ளூர், வெளியூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மறைந்த ஜனாஸாவுக்கு தங்களுடைய அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தனர்.
இனிமேல் அழுது புரண்டாலும் பாசம் பொங்கி வழிந்தாழும் பாதுகாப்பில்லாத அந்த வீட்டிற்கோ இந்த பூமிக்கோ திரும்பவும் ஆயிஷா வரப்போவதில்லை.
பெற்றோர்களால் அவள் பாதுகாப்பு இழந்தாலும், மறுமையில் அவளது காலடியில் (சிபாரிசு தேடி) இவர்கள் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவார்கள் என்பதே உண்மை.
எந்த ஒரு செல்வமும் இருக்கும் போது அதன் பெறுமதி யாருக்கும் புரிவதில்லை, இழந்த பின் தவிப்பதே மனிதப் பலவீனமாகும்.
ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும், குற்றவாளி தண்டிக்க பட வேண்டும், இதுபோன்ற பல அப்பாவி ஆயிஷாக்களுக்கு இப்பரிதாபம் ஏற்படாமல் இருப்பதற்குமான சகல கட்ட நடவடிக்கைகளையும் அட்டுலுகம வாழ் மக்களும், இந்நாட்டு அரசும், மனித உரிமை ஆர்வளர்களும் உறுதியாகவும், அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டும் என நியூஸ் நவ் வேண்டிக்கொள்வதோடு சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு சுவன பாக்கியம் கிடைக்கவும் அவளின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் நியூஸ் நவ் பிரார்த்தித்துக்கொள்கின்றது.