பிரதமரை நியமித்து உடனடியாக அமைச்சரவையை அமைக்குமாறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று (11) பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக சூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பிக்கவுள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளதுடன் அந்தக் கோரிக்கையை முன்வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சபாநாயகர் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிரான எதிர்க்கட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவாரம் எடுத்து கொள்ள சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் நாளை (12) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் கூடவுள்ளனர். நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்துமபண்டார, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் இந்த சூம் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.