பண்டாரகம அட்டுளுகம பகுதியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பாக ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு நியூஸ் நவ் செய்தி தளத்துக்கு தெரிவித்தது.
அதேநேரம், தற்போது சமூக ஊடகங்களில் பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பகிரப்படும் செய்தி தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஆயிஷாவின் மாமா ஆவார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக 22 பேரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாகவும் சிறுமியின் பிரதேச பரிசோதனை அறிக்கை இன்று மாலை வெளிவரும் என பொலிஸ் ஊடகப்பிரிவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நபரின் உடலில் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சேறும் சகதியுமான துணியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சிறுமி காணாமல் போன தினம் காலை 10.15 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இதற்கு முன்னர் தாய் மற்றும் மகள் தனியாக இருந்த வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்
மே 27 வெள்ளிக்கிழமையன்று பண்டாரகம அட்டுளுகமவில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட அவர், மறுநாள் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.