எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போவதாகவும், உணவு மற்றும் விவசாய அமைப்புடன் அரசாங்கம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன், இலங்கை எதிர்காலத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்கப் போகிறது.
அரசாங்கம் உணவு மற்றும் விவசாய அமைப்பு, UNICEF, UNFP, உலக உணவுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகத் தொடர்பு கொண்டு இதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டின் பொதுமக்கள் பட்டினியால் வாடுவதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு முன் ஏற்பாட்டை இப்போதே தயாரிக்கப்பட வேண்டும், என்று சஜித் தெரிவித்துள்ளார்.
மேலும் அவசர அவசரமாக மருத்துவ மருந்து தட்டுப்பாடு குறித்து நிதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘தற்போது நாம் எதிர்நோக்கும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து நிதி அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும். பல அத்தியாவசிய மருந்துகள் இப்போது நாட்டில் இல்லை.
மேலும், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறையால் பல அறுவை சிகிச்சைகள் தாமதமாகி வருகின்றன. இதை இனி ஏற்க முடியாது. மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.