சர்வதேச ஊடகமான அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லேவை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.
இன்றையதினம், புதன்கிழமை மேற்கு கரை நகரான ஜெனின் நகரில் இஸ்ரேலிய தாக்குதல்களை செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த போது அவர் நேரடி தோட்டாவால் தாக்கப்பட்டார் என்று அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மற்றொரு பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அலி சமூதி, இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார். எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அபு அக்லேவின் உடலுக்கு ஜெனின் நகரில் துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், அவரது உடலுக்கு பாலஸ்தீனியக் கொடியும், ‘பிரஸ்’ என்று குறிக்கப்பட்ட ஒரு ஜாக்கெட்டும் போடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
51 வயதான அபு அக்லே ஜெருசலேமில் பிறந்தார். அவர் 1997 இல் அல் ஜசீராவில் பணிபுரியத் தொடங்கியதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதியிலிருந்து தொடர்ந்து செய்தி அறிக்கைகளை வழங்கினார்.
அவர் ஜோர்தானில் உள்ள அல் யர்மூக் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவராவார்.
இதேவேளை ‘சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை’ மீறும் ‘அப்பட்டமான கொலையை’ கண்டி த்துள்ளதுடன் மேலும் அபு அக்லேவின் மரணம் ‘கொடூரமான குற்றம், இதன் மூலம் ஊடகங்கள் அதன் செய்தியை வழங்குவதை தடுக்கும் நோக்கம்’ என்றும் அல் ஜசீரா மீடியா நெட்வொர்க் அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.