கண்ணியம் மிக்க ரமழான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு நோற்பதற்கான பாக்கியத்தை அல்லாஹ் இலங்கை மக்களுக்கும் இம்முறை தந்தான். அந்த வகையில் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என தேசிய ஜக்கியத்துக்கான சர்வ சர்வ மத கூட்டமைப்பின் சமயத்தலைவர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி தெரிவித்துள்ளார்
புனித நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
30 நாட்களும் நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட்டு இன்று ஷவ்வால் தலைப்பிறையில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.
இப்பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நன்நாளில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக எடுத்தியம்பியுள்ளார்கள். அந்தடிப்படையில் நாமும் இப்பெருநாளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நோன்பு பெருநாளானது மனிதனை புனிதனாக்கும் நல்ல நாளாக விளங்குகிறது. அதனால் நாம் எமது அக்கம் பக்கத்து அயலவர்களை உபசரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு ஏழை எளியோரையும் உபசரித்து அவர்களது கஷ்டங்களை நீக்க உதவுவது மிக அவசியம்.
இந்த நன்நாளில் எந்தவொரு ஏழையும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸதகத்துல் பித்ராவை கடமையாக்கினார்கள்.
அதாவது பட்டினியில் அன்றி பெருநாளன்று எல்லோரும் மகிழச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
அந்த வகையில் இலங்கையில் நாம் சிங்களவர்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் என மூவின சமூகங்களுடன் சேர்ந்து வாழுகின்றோம். அதனால் ஏழை எளியர்வகள் யாராக இருந்தாலும் அவர்களை உபசரிப்பது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையும் கூட.
ஆகவே இந்நன்நாளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்துள்ள படி அமைத்துக் கொள்வோம்.
அத்துடன் தற்போது பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நமது தாய் திருநாடு இலங்கை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்திக்காக இப்புனித நாளில் இறைவனைப் பிரார்திப்போம்.
அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி,
சம-தலைவர் தேசிய ஜக்கியத்துக்கான சர்வ சர்வ மத கூட்டமைப்பு.