குவைத் இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் கத்தான் மறைவு!

Date:

முஹம்மத் பகீஹுத்தீன்

1946 ஆம் ஆண்டு குவைத் மண்ணில் பிறந்த ‘சிம்மக் குரலோன், மின்பர் மேடையின் கம்பீரக் குரல்’ என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அஹ்மத் கத்தான் (76) நேற்றையதினம் திங்கட்கிழமை குவைத்தில் காலமானார்.

அஷ்ஷெய்க் கத்தான் மரணிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இறைவன் அழைப்பை ஏற்று மறுமை வாழ்வுக்காக பயணித்தார்.

அஷ்ஷெய்க் அஹ்மத் கத்தானின் ஒலிப்பேழைகளை கேட்கும் போது அறிஞர் கிஷ்கியின் அனல் பறக்கும் பேச்சு ஞாபகத்திற்கு வரும்.

80 களில் முஸ்லிம் உலகில் பெரும் தாக்கம் செலுத்தும் மின்பர் மேடையின் சிம்மக் குரலாக அஹ்மத் கத்தான் திகழ்ந்தார். அக்காலத்தில் அவருடைய ஒலிநாடாக்கலை தேடிப் பெற்று செவிமடுக்கும் பழக்கம் இருந்தது. அதில் நடுநிலை சிந்தனை இருக்கும், சமநிலை பேணும் அழைப்பு இருக்கும். இளைய தலைமுறைக்கான இனிய வழிகாட்டல் கிடைக்கும்.

சத்தியத்தை தயங்காமல் கணீரென்று முழங்கும் அவருடைய கம்பீரக் குரலில் குத்பாக்களை செவிமடுப்பவர்கள் ஒரு போதும் தூங்க முடியாது. அதனை கேட்டு விட்டுச் சென்று வீட்டிலும் தூங்க முடியாது.

அவரது ஜும்மா உரைகள் தாலாட்டும் குத்பாக்கள் அல்ல. சிந்தனைக் கிளர்ச்சியை தூண்டும் வீர வசனங்கள். தூக்கத்தை கலைக்கும் சத்திய போதனைகளாகும்.

கொள்கை வாழும் பூமியான அக்ஸாவின் விடுதலைக்காக குரல் கொடுப்பார். முஸ்லிம் உம்மாவின் அவலங்களுக்காக துணிவோடு பேசுவார். வருங்கால பரம்பரைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அவரது உரை அமையும்.

உணர்ச்சியோடு பேசுவார் ஆனால் நடுநிலை சிந்தனையைத் தான் முன்வைப்பார். வீரமிக்க அவரது அழைப்பு சமநிலை பேணியதாகவே இருக்கும். அதுதான் அவரின் சிறப்பு. எளிமையான வசன நடையில் சத்தியத்தை இனிமையாக சொல்லுவார். கேட்கும் உள்ளங்களை அது வசீகரிக்கும்.

கம்பீரக் குரல் கொண்டு ஆற்றிய அவரது உரைத் தொடர்களும், சிந்தனைகளும் கட்டுரைகளாக, புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
மறுமையின் நிஜவாழ்வுக்கான நிலையான தர்மங்களாக எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது முயற்சிகளையும் உழைப்பையும் ஏற்றுப் பொருந்திக் கொள்ள வேண்டும் என பிராத்திக்கின்றோம்.

குவைத் மண் ஈன்றெடுத்த சிம்மக் குரலோன், சிந்தனை சிற்பி, அன்பு அழைப்பாளர் அஹ்மத் கத்தானின் இழப்பு உலக முஸ்லிம்களின் துயரமாகவே உள்ளது. அவர் முஸ்லிம் சமூகத்தின் வேதனைகள் கண்டு அழுதார்.

உள்ளங்களில் கவலை நிரம்பி வழிகிறது. கண்கள் குலமாகின்றன. இறைவா! நாம் உனக்கே சொந்தமானவர்கள் உன்னிடமே மீளுவோம் என்ற வார்த்தைகள் எங்களை சுதாகரித்துக் கொள்ள உதவுகிறது.

துயரம் நிறைந்த இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய அன்பர்கள், நண்பர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் அன்புள்ளங்கொண்ட குவைத் மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையம் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யா அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தின் துயர் துடைப்பதற்காக அயராது உழைத்த, சத்தியம் வாழ வேண்டும் என்பதற்காக வீரக் குரல் கொடுத்த உனது அடியான் அஹமத் கத்தானின் சகல பாவங்களையும் மன்னித்து கப்ரின் வேதனையில் இருந்தும் நரக நெருப்பில் இருந்தும் காப்பாற்றி ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவாயாக!

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...