ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் மே 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (12) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
அதற்கமைய ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தின் விசேட அங்கீகாரத்துடன் பரிசீலிக்க கட்சித் தலைவர்கள் இன்று (12) தீர்மானித்துள்ளனர்.
நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, சபாநாயகரிடம் பிரேரணையை முன்வைக்கும் பிரேரணையையும் கட்சித் தலைவர்கள் முன்வைத்தனர்.
இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதன் பின்னர் முதல் பணியாக பிரதி சபாநாயகரை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அவைத்தலைவர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் முன்னாள் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல ஜீவன் தொண்டமான், கெவிது குமாரதுங்க, எம்.ஏ.சுமந்திரன், ஜி.ஜி.பொன்னம்பலம், திலான் பெரேரா, வீரசுமண வீரசிங்க, ரவூப் ஹக்கீம், அசங்க நவரத்ன, மஹிந்த அமரவீர, ரஞ்சித் மத்தும, அரவிந்தன் பத்ம குமார், அங்கஜன், குமார் , கயந்த கருணாதிலக, நிமல் சிறிபால டி சில்வா, அனுரகுமார திஸாநாயக்க, அலி சப்ரி ரஹீம், ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் எம்.முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.