நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின் உற்பத்திக்காக அதிகளவான டீசல் வெளியிடப்படுவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம், டீசல் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் பழுதடைந்ததையடுத்து, மூன்று மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு அதிகளவு டீசல் மின்சார உற்பத்திக்காக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வழக்கமாக தினசரி 4,000 மெட்ரிக் தொன் டீசல் பெற்றோல்; நிரப்பு நிலையங்களுக்கு விநியோகப்படும் என்றும், போதுமான அளவு இருப்புக்கள் இருந்தும் தற்போது 1000 முதல் 1500 மெட்ரிக் தொன்கள் மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும், தற்போது 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் அடுத்த மூன்று நாட்களுக்குள் குறையும் என்று கூறிய அமைச்சர்,
எரிபொருள் தாங்கிகளின் சமீபத்திய வேலைநிறுத்தம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகக் கோளாறுகள் காரணமாக தற்போது பெற்றோலுக்காக வரிசை காணப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.