மனுஷ நாணயக்கார மற்றும் தானும் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கேட்டுக் கொண்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஒப்புக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திடம் ஹரீன் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், கோரிக்கையை முன்வைத்த சில மணிநேரங்களில், படங்கள் மற்றும் காட்சிகள் பகிரங்கப்படுத்தப்பட்டன.
இதேவேளை, அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வழியில் மனுஷ நாணயக்காரவிடம் காரில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டைக் காப்பாற்ற அரசியல் இலட்சியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு முன்வருவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி முன், பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. முகம் பார்க்கவில்லை. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.