நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, புத்தளம், இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒன்பது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அத்தனகலு ஓயா, களனி, களு, ஜின் மற்றும் நிலவல ஆகிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்வதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை இன்று காலை பெய்த கடும் மழையால் கொழும்பு பிரதேசத்தில் பலத்த மழை பெய்தது. பொரள்ளை கன்னங்கர வித்தியாலயம் நீரில் மூழ்கி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபையின் மாவட்ட 3 அலுவலகம் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து பரீட்சையை சுமார் இரண்டு மணித்தியாலங்களில் நடாத்துவதற்கு கடுமையாக உழைத்ததாக பாடசாலை அதிபர் சம்பிக்க வீரதுங்க தெரிவித்தார்.
பாடசாலையில் தேங்கியிருந்த நீரை குழாய்கள் ஊடாக தீயணைப்பு பிரிவினர் வெளியேற்றியதாகவும், வடிகால் அமைப்பில் இருந்த தடைகளை கொழும்பு மாநகர சபை ஊழியர் அகற்றியதாகவும் அதிபர் தெரிவித்தார்.
பாடசாலையின் பிரதான நுழைவாயிலில் இருந்து பரீட்சை நிலையத்திற்குச் செல்வதற்காக தீயணைப்புப் பிரிவிற்கு சொந்தமான வாகனம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.