பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பிரதமர் இன்று (5) அல்லது நாளை (6) அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் நடத்திய சந்திப்பிலேயே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசியலமைப்பு ரீதியாக சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து சபாநாயகர் தீர்மானிப்பார் எனவும், கட்சித் தலைமைக் கூட்டத்தில் இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் குணவர்தன தெரிவித்தார்.
எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அரசாங்கத்தைப் பாதுகாக்க அனைத்து உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.